2017-10-18 14:58:00

திருத்தந்தையின் மறைக்கல்வி: மரணத்தை எதிர்கொள்ளும் துணிச்சல்


அக்.,18,2017. குளிர் காலம் துவங்கி, காலையில் குளிரின் தாக்கம் ஓரளவு அதிகமாகவே இருந்தபோதிலும், கூட்டம் அதிகமாகவே இருந்ததால், இவ்வார புதன் மறைக்கல்வி உரை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. இலாசரை உயிர்ப்பிப்பதற்கு முன்னர், வாழ்வு, மரணம், உயிர்ப்பு ஆகியவை குறித்து, இயேசு மார்த்தாவுடன் நடத்திய உரையாடலின் பகுதி, புனித யோவான் நற்செய்தி 11ம் பிரிவிலிருந்து வாசிக்கப்பட, நம்பிக்கை மற்றும் மரணம் எனும் உண்மைத்தன்மை குறித்து, தன் கருத்துக்களை திருப்பயணிகளோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! இன்று நான், நம்பிக்கை மற்றும் மரணம் எனும் உண்மை நிலை குறித்து உங்களாடு உரையாட விரும்புகின்றேன். மரணம் எனும் இந்த உண்மை நிலையை எதிர்கொள்ள, இந்த நவீன உலகம் தயாரற்ற நிலையிலேயே இருப்பதை, பல வேளைகளில் நாம் காண்கிறோம். கடந்த கால நாகரீகங்கள், இறப்பை எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொண்டிருந்தன. வயதானவர்கள் தங்கள் இளையோருக்கு, இந்த தப்ப முடியா நிகழ்வு குறித்து எடுத்துரைக்கும்போது, நம்மைவிட பெரிதான, அதேவேளை, நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வாழ்வை நோக்கிய அழைப்பு, என மரணத்தை நோக்கும்படி கற்பித்தனர். நம் காலத்திலோ, எத்தனையோ மரணங்கள், ஒரு மூச்சுக்காற்றுபோல் கடந்து சென்றுவிடுகின்றன. மரணம் எனும் இந்த மறையுண்மையை எதிர்கொள்ள இயேசுவே நமக்கு உதவுகிறார். நம்மால் அன்புகூரப்பட்ட ஒருவரின் மரணத்தைக் குறித்து நாம் துக்கம் கொள்வது இயல்பான ஒன்றே என்பதையும் அவரே காண்பிக்கிறார். ஏனெனில், இலாசரின் மரணம் குறித்து அவரும் கண்ணீர் சிந்தினார். மரணம் குறித்து அவர் துக்கம் கொண்டதுடன், தந்தையை நோக்கி செபித்து, கல்லறையிலிருந்து இலாசரை வெளியே கொணர்ந்தார். நம்மைக் குணப்படுத்தவும், மரணத்திலிருந்து நம்மை மீட்கவும் இயேசு வந்தார் என்பதே நம் கிறிஸ்தவ நம்பிக்கை. 'நானே வாழ்வும் உயிர்ப்பும்' (யோவா.11:25) என்கிறார் இயேசு. நாம் அவரில் நம்பிக்கை கொண்டால், இறப்பினும் உயிர்வாழ்வோம். நம் துக்கத்தின் முன்னிலையில், நாம் அவரில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் அழும்போது, கிறிஸ்து நமக்கு அருகில் மிக நெருக்கமாக உள்ளார் என்பதை நாம் அறிவோம். இதுவே நம் கிறிஸ்தவ நம்பிக்கை. நாமும் மரணத்தை எதிர்நோக்கும் அந்த நாளில், 'நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு' (மாற்கு 5:41) என்ற இயேசுவின் குரலைக் கேட்கலாம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹாலந்திலிருந்து வந்த திருப்பயணிகள் குழுவிற்கு தன் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், உயிர்ப்பு மற்றும் வாழ்வின் சான்றுகளாகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், சொமாலியா நாட்டில், அண்மையில் 300க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பலிவாங்கிய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.