2017-10-18 15:27:00

அனைத்து மதத்தினரும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும்


அக்.18,2017. மதத்தின் பெயரால் வன்முறைக்கு அல்லது அதனை நியாயப்படுத்துவதற்குத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்கள், அமைதியின் ஊற்றாகிய கடவுளை மிகக் கடுமையாய் புண்படுத்தும்வேளை, அனைத்து மதத்தினரும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் காலையில் பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்குமுன், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள அறையில், அமைதிக்கான மதங்களின் உலக அவையின் எண்பது பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் மற்றும் ஆயுத மோதல்களால், ஏராளமான மக்கள் உருவிழந்துள்ள இன்றைய உலகில், அமைதிக்காக உழைக்க வேண்டியது, உடனடிப் பணியாக உள்ளது என்று கூறினார்.

அமைதி என்பது, கடவுளின் கொடையாகவும், மனிதரால் நிறைவேற்றப்பட வேண்டியதாகவும் உள்ளதால், எல்லா மதத்தினரும், அமைதிக்காகச் செபித்து, அதற்காக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நன்மனம் கொண்ட அனைத்து மனிதரும், குறிப்பாக, பொறுப்பிலுள்ளவர்கள் தங்களின் இதயங்கள், மனங்கள் மற்றும் கரங்களுடன் அமைதிக்காக உழைப்பதற்கு, தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியை நிலைநிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில், நீதியும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, அமைதியைக் கட்டியெழுப்புவதில், மதங்கள், தங்களின் ஆன்மீக மற்றும், நன்னெறி வளங்களுடன், ஒரு குறிப்பிட்ட மற்றும் தனித்த பங்கைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்.

அமைதிக்கான மதங்களின் உலக அவை, மதத்திற்கும், அமைதிக்கும் ஆற்றிவரும் விலைமதிப்பற்ற சேவைக்கு, தன் பாராட்டைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதி, உடன்பிறப்பு உணர்வு, ஆயுதக்களைவு, படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் வழியாக, அமைதியை ஊக்குவிக்கும் கடமையை,  மதங்கள், இயல்பிலே கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.