2017-10-17 15:55:00

புனித பூமியின் பிரான்சிஸ்கன் சபையினருக்கு திருத்தந்தை கடிதம்


அக்.17,2017. பிரான்சிஸ்கன் சபையினர், புனித பூமியின் பாதுகாவலர்களாகப் பணியைத் தொடங்கி 800 ஆண்டுகள் நிறைவுறும் இவ்வேளையில், புனித பூமியில் கிறிஸ்தவ வாழ்வுக்குத் தொடர்ந்து சான்று வழங்கிவரும் அச்சபையினர் அனைவருக்கும், தனது சிறப்பு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பூமியின் பாதுகாவலுக்குப் பொறுப்பான, பிரான்சிஸ்கன் அருள்பணி Francesco Patton அவர்களுக்கு, இந்த 800ம் ஆண்டையொட்டி கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 6ம் கிளமென்ட் தொடங்கி, தனக்கு முந்தைய திருத்தந்தையர், புனித பூமியைப் பாதுகாப்பதற்கு, பிரான்சிஸ்கன் சபையினரிடம் ஒப்படைத்ததை, தானும் புதுப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

1217ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பெந்தக்கோஸ்து பொதுப் பேரவையில், அருள்பணி பிரான்சிஸ்கோ அவர்கள், மறைப்பணி மற்றும் உலகளாவிய கூறுக்குத் திறந்த மனதுள்ளவர்களாய், விசுவாசம், உடன்பிறப்பு உணர்வு மற்றும் அமைதியின் சான்றுகளாக, பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளர்கள், உலகெங்கும் சென்று, வாழ்வதற்கு அழைப்பு விடுத்ததையும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாறு புனித பூமியில், பிரான்சிஸ்கன் சபையின் மாநிலம் உருவாகி, அது முதலில், வெளிநாடு அல்லது சிரியா என அழைக்கப்பட்டது என்றும், பின்னாளில் இம்மாநிலத்தின் பணி விரிவடைந்தது என்றும், முதலில் 8 அருள்பணியாளர்கள் புனித பூமியில் பணியைத் தொடங்கியதன் 800ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள், கடந்த ஜூன் 11ம்  தேதி தொடங்கியுள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

புனித பூமியில் தொல்பொருள் ஆய்விலும், பெத்லகேமில் பல ஆண்டுகள் தங்கி, விவிலிய ஆய்வு செய்த புனித ஜெரோம் அவர்களின் மரபில், விவிலியத்தைக் கவனமாய் படிப்பதிலும் இச்சபையினர் தொடர்ந்து காட்டிவரும் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளார், திருத்தந்தை.

புனித பூமியில் தலத்திருஅவை குழுக்களுக்கும் உதவுவதோடு, ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு இச்சபையினர் ஆற்றிவரும் பணிகளைத் தொடருமாறும், இச்சபையை ஆரம்பித்தவரின் நோக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும், தன் செய்தியில்,   பிரான்சிஸ்கன் சபையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.