2017-10-17 16:35:00

இந்திய அருள்பணியாளரின் கண் தான இயக்கம், உலகளாவிய...


அக்.17,2017. நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட கண் தான இயக்கம், தற்போது ஐந்து நாடுகளில், 250 நகரங்களில் பரவியுள்ளது என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.

கிளேரிசியன் சபை அருள்பணியாளர் ஜார்ஜ் கண்ணன்தானம் அவர்கள், 2013ம் ஆண்டில் ஆரம்பித்த கண் தான இயக்கம், கண் விழிவெண்படலம் தானம் செய்யப்படுவதை ஊக்குவித்து வருகிறது.

உலக பார்வை தினம் கடைப்பிடிக்கப்பட்ட அக்டோபர் 12, கடந்த வியாழனன்று, இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளின் 250 நகரங்களில் கண் தானத்தை ஊக்குவித்து, பல்லாயிரக்கணக்கான பேர், கண்களைக் கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு பேரணிகளில் கலந்துகொண்டனர். இதில் பேராயர்கள், ஆயர்கள், இருபால் துறவியர் ஆகியோரும் உள்ளடங்குவர்.

இந்த கண் தான இயக்கம், கடந்த நான்கு ஆண்டுகளில், ஐந்து நாடுகளில், நூற்றுக்கணக்கான தன்னார்வ நிறுவனங்கள், மறைமாவட்டங்கள் மற்றும் துறவற நிறுவனங்களில் பரவியுள்ளது.  

புது டெல்லியில் நடைபெற்ற பேரணியில், பார்வைத் திறனற்ற நூறு பேர் உட்பட, ஏறத்தாழ 600 பேர் கலந்துகொண்டனர்.

உலகிலுள்ள பார்வையற்றவர்களில், ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ ஒரு கோடியே 50 இலட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று, அருள்பணி Kannanthanam  அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.