2017-10-16 16:15:00

திருப்பீட பல்சமய உரையாடல் அவை : தீபாவளி செய்தி


அக்.16,2017. கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் பன்மைத்தன்மையை, உண்மையாகவே மதித்து போற்றுவதன் வழியாக, ஒற்றுமையும் நலமும் நிறைந்த ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது.

இந்தியாவில், இவ்வாரத்தில் தீபாவளி ஒளிவிழாவைச் சிறப்பிக்கும் எல்லாருக்குமென வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, சகிப்புத்தன்மையும், ஒற்றுமையும் நிறைந்த, ஒரு நலமான சமுதாயத்தை உருவாக்க, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

சகிப்புத்தன்மை என்பது, பிறரின் மனநிலையில் அவர்களின் இருப்பை ஏற்று, பிறருடன் திறந்த மனதோடும், பொறுமையோடும் வாழ்வதாகும் என்றும், நிலையான அமைதி மற்றும், உண்மையான நல்லிணக்கத்திற்காக நாம் உழைக்க விரும்பினால்,        சகிப்புத்தன்மை மட்டும் போதாது, மாறாக, பல்வேறு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் உண்மையாகவே மதித்துப் போற்ற வேண்டும் என்றும் அச்செய்தி கூறுகிறது.  

அனைத்து தனிமனிதருக்கும், சமூகங்களுக்கும் நன்மதிப்பைக் காட்டுவதன் வழியாக, சகிப்புத்தன்மையின் எல்லையைக் கடந்து நாம் செல்வதற்கு, சவால் விடுக்கப்படுகிறோம் என்றும், அச்செய்தி கூறுகிறது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால், Jean-Louis Tauran, அந்த அவையின் செயலர் ஆயர், Miguel Ángel Ayuso Guixot ஆகிய இருவரும் இச்செய்தியில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், அக்டோபர் 18 அல்லது 19ம் தேதிகளில் தீபாவளி ஒளிவிழா சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.