2017-10-16 16:22:00

அமேசான் பகுதிக்கு 2019ல் சிறப்பு ஆயர்கள் மாமன்றம்


அக்.16,2017. இஞ்ஞாயிறு காலையில், நிறைவேற்றிய திருப்பலியில், திருஅவைக்கு மேலும் 35 புதிய புனிதர்களை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையில், 2019ம் ஆண்டில் அமேசான் பகுதிக்கு  சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் என்று அறிவித்தார்.

 

நற்செய்திக்குச் சுடர்விடும் சாட்சிகளாக வாழ்ந்த இந்தப் புதிய புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்வும், பரிந்துரையும், நம் வாழ்வுப் பாதையில் துணையாகவும்,  திருஅவை மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக, உடன்பிறப்பு உணர்வையும், தோழமையையும் எப்போதும் நாம் ஊக்குவிப்பதற்கு, நமக்கு உதவுவதாகவும் இருக்கட்டும் என்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இலத்தீன் அமெரிக்காவின் சில ஆயர் பேரவைகள், இன்னும், உலகின் ஏனையப் பகுதிகளிலுள்ள மேய்ப்பர்கள் மற்றும் விசுவாசிகளின் ஆவலை வரவேற்று, அமெரிக்கப் பகுதியின் ஆயர்களுக்கு, சிறப்பு ஆயர்கள் மாமன்றம் ஒன்றை நடத்த தீர்மானித்தேன் என்று அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றம், உரோம் நகரில் 2019ம் ஆண்டு அக்டோபரில்  நடைபெறும் என்றும், அமெரிக்கப் பகுதியில், குறிப்பாக, மறக்கப்பட்டவர்களாக வாழும் இப்பகுதியின் பழங்குடியினத்தவர்க்கு நற்செய்தி அறிவிப்பின் புதிய பாதைகளைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக இது நடத்தப்படுகின்றது என்றும், திருத்தந்தை கூறினார். நம் பூமிக்கோளமாகிய அமேசான் காடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும், ஓர் அமைதியான வருங்காலமின்றி வாழும் பழங்குடியின மக்கள், இம்மாமன்றத்தில் கவனத்தில் கொண்டுவரப்படுவார்கள் என்றும் திருத்தந்தை அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.