2017-10-16 15:43:00

எல்லாருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும்


அக்.16,2017. உலக உணவு தினமான இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரு டுவிட்டர் செய்திகளில், உலகில் பசியே இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.

“ஒவ்வொரு மனிதருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டுமென்ற உரிமையை உறுதி செய்வது, அவசரமான மற்றும் கட்டாயமாக ஆற்றப்பட வேண்டியதாகும். இதை நாம் புறக்கணிக்க முடியாது” என்றும், “பகிர்வதற்கு மனமாற்றம் தேவைப்படுகின்றது, இது ஒரு சவாலாகும்” என்றும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் கூறுகின்றன.

மேலும், தென் சூடான் நாட்டை, குறிப்பாக, அந்நாட்டில் நிலவும் கட்டுக்கடங்காத கடும் மனிதாபிமான அவசரகால நிலையை மறக்க வேண்டாம் என்று, உலக சமுதாயத்திடம் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் சூடான் பற்றிய புதிய நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் நிலைபற்றி, ஏழைகளின் சார்பாக, வழக்கமாக, உலகிற்கு அறிவிப்பவர்கள் மறைப்பணியாளர்கள் என்றும், இவ்வாறு, தேவையில் இருப்போர் மத்தியில் வாழும் மறைப்பணியாளர்களின் தாராள மற்றும், உறுதியான அர்ப்பணம் பற்றி, கொம்போனி மறைப்பணியாளர் அருள்பணி Daniele Moschetti அவர்கள், இந்நூலில் எடுத்தியம்பியுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

தென் சூடானில் தொடர்ந்து இடம்பெறும் மோதல்களுக்கு, தீர்வு காண வேண்டியது, உலகினர் ஒவ்வொருவரின் கடமை என்றும், அந்நாட்டில் சப்தமின்றி அனுபவிக்கப்படும் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வை உலகில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், தனது முன்னுரையில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“தென் சூடான் : அமைதி, நீதி மற்றும் மாண்பு பற்றிய நீண்ட மற்றும் துன்பமான பாதை (Sud Sudan: Il lungo e sofferto cammino verso pace, giustizia e dignità)” என்ற தலைப்பில், இந்நூல், இத்தாலியத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.