2017-10-14 15:56:00

புதிய புனிதர்கள் அமைதியான உலகை எழுப்புவதற்குத் தூண்டுதல்


அக்.14,2017. அக்டோபர் 15, இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு வாளாகத்தில் நிறைவேற்றும் திருப்பலியில், பிரேசில், இத்தாலி, மெக்சிகோ, இஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட மறைசாட்சிகள் மற்றும், முத்திப்பேறு பெற்ற இரு அருள்பணியாளர்களை, புனிதர்கள் என்று அறிவிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரேசில் நாட்டின் "Natal மறைசாட்சிகள்" என்று அழைக்கப்படும், முத்திப்பேறு பெற்றவர்களான, இயேசு சபை அருள்பணி Andre de Soveral, மறைமாவட்ட அருள்பணி Ambrosio Francisco Ferro, பொதுநிலையினரான Mateus Moreira மற்றும், அவர்களோடு சேர்ந்த 27 பேர், 1645ம் ஆண்டில், கத்தோலிக்கருக்கு எதிரான அடக்குமுறையில், Natalலில், ஹாலந்து நாட்டு கால்வனிஸ்ட் சபையினரால் கொல்லப்பட்டனர்.

இன்னும், மெக்சிகோ நாட்டின் "Tlaxcala சிறார் மறைசாட்சிகளான" Cristobal, Antonio, Juan ஆகிய மூவரையும், இஞ்ஞாயிறன்று புனிதர்களாக அறிவிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ். 12க்கும், 13 வயதுக்கும் உட்பட்ட இச்சிறார், மெக்சிகோவில் கத்தோலிக்கத்தை ஏற்ற முதல் பழங்குடியினத்தவர். இவர்கள், கிறிஸ்தவத்தை மறுதலித்து, தங்களின் மரபுகளுக்குத் திரும்ப வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், 1527ம் ஆண்டுக்கும், 1529ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டனர்.

இத்தாலிய கப்புச்சின் துறவு சபையின் Acriயின் Angelo அவர்கள், 1739ம் ஆண்டில் காலமானார். இஸ்பெயின் நாட்டவரான, Piarist அருள்தந்தையர் சபையைச் சேர்ந்த முத்திப்பேறு பெற்ற அருள்பணி Faustino Miguez அவர்கள், 1831ம் ஆண்டில் பிறந்தவர். சிறுவர்கள் மட்டுமே கல்வி வாய்ப்பைப் பெறும் வசதியுடைய அக்காலத்தில், சிறுமிகளுக்கு பள்ளிகளைத் தொடங்கியவர் அருள்பணி Miguez.

இப்புதிய புனிதர்கள், அமைதியான உலகை கட்டியெழுப்புவதற்கு, கிறிஸ்தவர்களுக்குத் தூண்டுதலாக உள்ளனர் என்று, பிரேசில் நாட்டு, நட்டால் பேராயர், Jaime Vieira Rocha அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.