2017-10-11 16:11:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : விழிப்புடன் காத்திருத்தல்


அக்.,11,2017. உரோம் நகரில் குளிர் காலம் துவங்கிவிட்டது என்பதை நினைவூட்டும் விதமாக அவ்வப்போது, குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தாலும், பகலில் சிறிது நேரம் இதமான வெப்பம் இருந்து ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு சூழலில், இதமான தட்பவெப்ப நிலையில் திருப்பயணிகள் கூட்டம் உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் நிரம்பி வழிய, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையின்போது, முதலில் லூக்கா நற்செய்தி 12ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. 'விழிப்பாயிருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றோர்' என்ற, இந்த பகுதியின் அடிப்படையில் தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! விழிப்புடன் காத்திருக்கும் நிலை என நம்மால் அழைக்கவல்ல நம்பிக்கையின் பரிமாணம் குறித்து இன்று உங்களுடன் உரையாட நான் ஆவல் கொள்கிறேன். விளக்குகள் எரிந்துகொண்டிருக்க, தங்கள் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, தலைவர் வீடு திரும்பும்வரை கண்விழித்துக் காத்திருக்கும் பணியாளர்கள்போல், தம் சீடர்கள் இருக்கவேண்டும் என இயேசு கூறுவதை லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் காண்கிறோம் (லூக். 12:35-36).  ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம், எப்போதும் விழிப்புடன் ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். அவ்வாறு திரும்பி வரும்போது, ஆண்டவர் அனைத்திலும் அனைத்துமாக இருப்பார்(1கொரி.15:28). ஒவ்வொரு நாளையும் இறைவனின் கொடையாக வரவேற்கவும், அந்நாளின் நற்செயல்களை இறைவனுக்கு காணிக்கையாக்கி வாழவும் உதவும் வகையில், ஒவ்வொரு நாளும் இறைவனைக் குறித்து விழிப்பாயிருக்கும் புது வாய்ப்பு நமக்கு வழங்கப்படுகிறது. நம்முடைய வாழ்நாள்கள் சலிப்புடையவைகளாக இருக்கும்போதும், பல்வேறு துன்பங்களை எதிர்கொள்ளும்போதும், இறையருள் குறித்து நாம் மறந்துவிடாமல் இருக்கவேண்டுமெனில், நம் விழிப்பு நிலைக்கு, பொறுமை என்பது அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. ஏனெனில், விடியல் தரும் மகிழ்வை மறக்க வைக்கும் அளவுக்கு, எந்த இரவும் தொடர்ந்துகொண்டேயிருப்பதில்லை. கிறிஸ்தவர்களாகிய நமக்கு உறுதியாகத் தெரியும், கிறிஸ்து மறுபடியும் வருவார் என்று. நாம் எவ்வளவுதான் துன்பங்களை அனுபவித்தாலும், வாழ்விற்கு நோக்கமும், ஆழமான அர்த்தமும் உள்ளது, மற்றும், இரக்கமுள்ள இறைவன் இறுதியில் நம்மை வாழ்த்தி வரவேற்பார். இவ்வாறு,   நம் வருங்காலம் என்பது நம் கைகளால் ஆற்றும் செயல்களால் மட்டுமல்ல, கடவுளின் பராமரிப்பால் வழிநடத்தப்படுகின்றது என்பதை உணர்ந்தவர்களாய், நம் வரலாற்றையும், வாழ்வையும் நம்பிக்கையுடனும், பற்றுறுதியுடனும் நாம் நோக்க முடியும். 'ஆண்டவராகிய இயேசுவே வாரும்'(தி.வெளி.22:20),  என முதல் சீடர்கள் உரைத்ததுபோல், அதே வார்த்தைகளை நாம் தினமும் உச்சரிப்போம். நம்முடைய மிகவும் துன்பகரமான வேளைகளில்,' இதோ நான் விரைவில் வருகிறேன்' (தி.வெளி.22:7) என இயேசு கூறும் ஆறுதல் பதில்மொழிகளை செவிமடுப்போம்.

இவ்வாறு, இவ்வார புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்தியா உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.