2017-10-11 16:19:00

உலக பார்வை தினத்திற்கு கர்தினால் டர்க்சன் செய்தி


அக்.11,2017. அக்டோபர் 12, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்படும் உலக பார்வை தினத்திற்கு, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன்.  

ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம், பார்வையிழப்பைத் தடுப்பதற்கான பன்னாட்டு நிறுவனம், பார்வையற்றவரின் உலக கழகம் ஆகியவற்றால் இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், உலகில் பார்வையிழப்புக்கு எதிராகப் பாடுபடும் எல்லாருக்கும், தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

இன்று உலகில், 3 கோடியே 90 இலட்சம் பேர் கண்பார்வையற்றவர்கள், 24 கோடியே 60 இலட்சம் பேர், பார்வைத்திறனற்றவர்கள், மூக்குக் கண்ணாடி அணியவில்லையென்றால், பார்வைத்திறனற்றவர்கள் எண்ணிக்கை மேலும் இரண்டு மடங்கு போன்ற புள்ளி விவரங்களையும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் டர்க்சன்.

இந்தப் பிரச்சனைகளுக்குமுன் நாம் செயலற்று இருக்க இயலாது என்றும், பார்வையிழப்பு பிரச்சனைகள் உள்ளவர்களில் 5 பேரில் நால்வரின் பார்வையிழப்பு தடுத்திருக்கக் கூடியது அல்லது, குணமாக்கக் கூடியது என்றும், பார்வைத்திறனற்றவர்களில், 90 விழுக்காட்டினர் உலகின் தென் பகுதியில், ஏழை நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறது, கர்தினாலின் செய்தி.

இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, திருஅவை, பார்வையற்றவர்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றது என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்.

உலக நலவாழ்வு நிறுவனம், 2013ம் ஆண்டில் நடத்திய கூட்டத்தில், “உலகளாவிய கண் நலம்” என்ற தலைப்பில் 2014ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை, ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கியதையும் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.