2017-10-09 15:52:00

திருத்தந்தை, ஜெர்மன் அரசுத்தலைவர் Steinmeier சந்திப்பு


அக்.09,2017. ஜெர்மன் நாட்டு அரசுத்தலைவர் Frank Walter Steinmeier அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், ஜெர்மன் அரசுத்தலைவர் Steinmeier.

இச்சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட செய்தித் தொடர்பகம், திருப்பீடத்திற்கும், ஜெர்மனிக்கும், அந்நாட்டின் திருஅவைக்கும், நிறுவனங்களுக்கும்  இடையே நிலவிவரும் நல்லுறவுகள் மற்றும் ஒத்துழைப்பு, பல்சமய உரையாடல், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல், குறிப்பாக லூத்தரின் சீர்திருத்தம் இடம்பெற்றதன் 500ம் ஆண்டில், கத்தோலிக்கருக்கும், பிற கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல்கள் ஆகியவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று கூறியது.

மேலும், ஐரோப்பா மற்றும், உலகின் பொருளாதார மற்றும் மதங்களின் நிலைமை, புலம்பெயரும் மக்களை வரவேற்று ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் பண்பாட்டை ஊக்குவித்தல் போன்ற விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

தன் துணைவியாருடன் திருத்தந்தையை சந்தித்தபின், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பைத் தோற்றுவித்த  Andrea Riccardi, அவ்வமைப்பின் தலைவர் Marco Impagliazzo மற்றும் அவ்வமைப்பின் ஏனைய  பொறுப்பாளர்களையும், ஜெர்மன் அரசுத்தலைவர் சந்தித்தார்.

ஒன்றிணைப்பு, புலம்பெயர்ந்தவர், ஏழ்மை ஆகிய விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.