2017-10-07 15:11:00

அணு ஆயுதங்கள் ஒழிப்பு அமைப்புக்கு நொபெல் அமைதி விருது


அக்.07,2017. அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட உழைக்கும் உலகளாவிய அமைப்புக்கு (ICAN), 2017ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக, நார்வே நொபெல் அமைதி விருது குழு அறிவித்துள்ளது.

இவ்விருது பற்றி அறிவித்த நார்வே குழு, அணு ஆயுதங்கள் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வரும்வேளை, இந்த உலகளாவிய அமைப்பு, உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட உழைப்பதைப் பாராட்டியும், ஊக்குவித்தும் இவ்விருது வழங்கப்படுவதாகக் கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும், ICAN எனப்படும் இந்த உலகளாவிய அமைப்பு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் கடந்த ஜூலை 7ம் தேதியன்று கொண்டுவரப்பட்ட, அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு உழைத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு 122 நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் உலக அளவில் நடைமுறைபடுத்தப்படுவதற்கு, ஐம்பது நாடுகள் இதனை அமல்படுத்த வேண்டும். ஆயினும், இதுவரை திருப்பீடம் உட்பட மூன்று நாடுகளே இதனை அமல்படுத்தியுள்ளன எனச் சொல்லப்படுகின்றது.  

அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட உழைக்கும் உலகளாவிய அரசு-சாரா அமைப்பான ICAN, ஏறத்தாழ நூறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றது.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.