2017-10-06 09:40:00

மனித வாழ்வைச் சுரண்டும் சுயநலத்தைக் கைவிட...


அக்.05,2017. மனித வாழ்வின் துவக்கம், முடிவு மற்றும் அதன் அர்த்தம் குறித்த கேள்விகளை எழுப்பிவரும் இன்றைய சமூகம், சுயநலப்போக்குகளுக்கு தன்னைக் கையளிக்கும்போது, அதுவே அனைத்து நடவடிக்கைகளையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் செயலாக மாறுகிறது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட வாழ்வுக் கழகத்தின் அங்கத்தினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் தன் வாழ்வு தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்குரிய ஆர்வமும், அதற்கு துணைசெய்யும் பொருளாதார வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளின் உதவியை நாடுவதும் தவறானவை அல்ல, மாறாக, அத்தகைய பாதையில் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மனித வாழ்வைச் சுரண்டுவதற்குரிய ஒரு பொருளாக நோக்கும் போக்கு கண்டிக்கப்பட்ட வேண்டும் என்றார்.

உலக சந்தைக் கலாச்சாரம் விரிவடையும்போது, இயல்பாகவே மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும் என பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றபோதிலும், அண்மைக் காலங்களில், ஏழ்மையும், போரும், மக்கள் கைவிடப்படலும், ஏமாற்றங்களுமே அதிகரித்து வருகின்றன என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களை முன்னோக்கி எடுத்துச்செல்லும் நம்பிக்கையாளர்கள் இன்று தேவைப்படுகிறார்கள் என்றார்.

தலைமுறையாக வாழ்வை வழங்கிவரும் திருமணம் மற்றும் குடும்பம் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இடம்பெறும் உடன்படிக்கையே, முழு சமூகத்தின் பாதையை தன் கைகளில் கொண்டுள்ளது எனவும் கூறினார்.

குழந்தைகள் மற்றும் முதியோரைப் பாதுக்காக்க வேண்டிய சமூகத்தின் கடமையையும் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.