2017-10-06 16:29:00

நம் பெருங்கடல்,வாழ்வுக்கு பெருங்கடல் கருத்தரங்கிற்கு செய்தி


அக்.06,2017. "நம் பெருங்கடல், வாழ்வுக்கு பெருங்கடல்" என்ற தலைப்பில், மால்ட்டாவில் இவ்வெள்ளியன்று ஆரம்பித்துள்ள, நான்காவது பன்னாட்டு கருத்தரங்கிற்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மீன்பிடி தொழிற்சாலை, கப்பல்வழி வர்த்தகம் ஆகியவற்றோடு தொடர்புடைய மனித வர்த்தகம், அடிமைத் தொழில், மனிதமற்ற சூழல்களில் வேலை போன்றவற்றால், எண்ணற்ற ஆண்களும் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளவேளை, இந்தப் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துகின்ற இக்கருத்தரங்கிற்கு வாழ்த்து தெரிவிப்பதாக, திருத்தந்தை கூறியுள்ளார்.  

கடற்கரையோரம் வாழ்கின்ற மக்கள் மற்றும் மீனவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத்தரமும், வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளும் பாதிக்கப்படுவது, கடல்மட்ட உயர்வால், தீவுகளின் இருப்பு அச்சுறுத்தப்படுவது போன்ற விவகாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது, திருத்தந்தையின் செய்தி.

பெருங்கடல்களை, மனித முன்னேற்றத்தின் ஒருங்கிணைந்த கூறின் ஓர் அங்கமாக நோக்கி, அவற்றைப் பாதுகாப்பது குறித்த நம் கடமையை ஏற்றல், உலகளாவிய சட்டத்தின் அடிப்படையில், பொதுநலனைப் பாதுகாப்பதற்கு அரசுகளின் கூட்டுமுயற்சி ஆகியவை அவசியம் என்றும், அச்செய்தி வலியுறுத்துகிறது. 

மனிதக் குடும்பத்தின் பொதுச் சொத்தாகிய பெருங்கடல்களை, வியப்புடனும் நன்றியுடனும் நாம் நோக்கும்போது, பெருங்கடல்களை, ‘நமது’ என, நாம் அழைக்கலாம் என்றும், பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கு இளையோரைப் பயிற்றுவிக்க வேண்டுமென்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.

அக்டோபர் 06, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்கின்ற, பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் வழியாக, திருத்தந்தையின் பெயரில் இச்செய்தியை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.