2017-10-06 10:11:00

ஒன்றிப்பின் கருவிகளாக ஈராக் ஆயர்கள் செயல்பட அழைப்பு


அக்.05,2017. கல்தேய வழிபாட்டுமுறை ஆயர் மன்றத்தின் அங்கத்தினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர வைக்கப்படல், கிராமங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், குடிபெயர்ந்த மக்கள் நாடு திரும்பல், திருஅவையின் சிறப்புரிமை, திருவழிபாடு, இறையழைத்தல், மேய்ப்புப்பணி போன்ற விவகாரங்கள் குறித்து கல்தேய வழிபாட்டுமுறை ஆயர் பேரவை விவாதித்துவரும் வேளையில், அவர்களை திருப்பீடத்தில் சந்திப்பதில் மகிழ்வதாக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ள ஈராக் மக்களின் காயங்களை இறைவன் குணப்படுத்தி, அவர்களை மீண்டும் எழுந்துவர உதவுவாராக என ஆயர்களிடம் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிப்பின் கருவிகளாக ஆயர்கள் செயல்படுவதோடு, பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல்களையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பவர்களாகவும் செயல்பட அழைப்பு விடுத்தார்.

புனித தோமையாரால் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பூமி என பாரம்பரியமாக கூறப்பட்டுவரும் ஈராக் நாடு, கலந்துரையாடலை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நாடு என்ற பாராட்டையும் வெளியிட்ட திருத்தந்தை, அதே பாதையில் தொடர்வதுடன், இளையோரிடையே இறையழைத்தல்களை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.