2017-10-02 15:32:00

வாரம் ஓர் அலசல் – உலக அகிம்சை தினம்


அக்.02,2017. One Young World இயக்கம் என்பது, பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு பிறரன்பு அமைப்பாகும். இது, 2009ம் ஆண்டில், David Jones, Kate Robertson ஆகிய இருவரால் ஆரம்பிக்கப்பட்டது. உலகிலுள்ள சிறந்த இளம் தலைவர்கள், இவ்வுலகில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த இயக்கம் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் உச்சி மாநாட்டை நடத்துகின்றது. நொபெல் அமைதி விருது பெற்ற தென்னாப்ரிக்க ஆர்வலர் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு உட்பட, பல ஆர்வலர்கள் இதில் ஆலோசகர்களாக உள்ளனர். உலகளாவிய சமூக விவகாரங்களில் அக்கறையுள்ள 18க்கும், 30 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர், One Young World  உச்சி மாநாட்டில், வழக்கமாக உரையாற்றுகின்றனர். 2017ம் ஆண்டின் உச்சி மாநாடு, கொலம்பிய நாட்டின் பொகோட்டாவில், அக்டோபர் 4, வருகிற புதன்கிழமையன்று ஆரம்பிக்கின்றது. அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், 196 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். வடகொரிய கம்யூனிச நாட்டிலிருந்து, சீனாவுக்குத் தப்பித்துச் சென்ற Yeonmi Park என்ற மனித உரிமை ஆர்வலர், 2014ம் ஆண்டு அக்டோபரில் டப்லின் நகரில் நடந்த, One Young World உச்சி மாநாட்டில், இவ்வாறு கண்ணீரோடு பேசியுள்ளார்.

இந்த உலகுக்கு சொல்ல விரும்பியதைச் சொல்ல விரும்பும் மக்கள் நாங்கள். வட கொரியாவின் நிலையை விவரிக்க இயலாது. அந்நாட்டில் ஒரேயொரு தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமே உள்ளது. இணையத்தளம் கிடையாது. சுதந்திரமாகப் பாடவோ, பேசவோ, உடுத்தவோ அல்லது சிந்திக்கவோ எங்களால் முடியாது. அங்கீகாரம் பெறாமல் வேறு நாடுகளில் தொலைபேசியில் பேசியதற்காக, மக்களைத் தூக்கில்போட்ட உலகிலுள்ள ஒரே நாடு வட கொரியா. இந்நாட்டு மக்கள் இன்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வட கொரியாவில் நான் வளர்ந்து வரும்போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எந்தவிதக் காதலையும் நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. காதல் கதைகள் பற்றிய நூல்கள், பாடல்கள், திரைப்படங்கள், இதழ்கள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு கதையும், கிம் சர்வாதிகாரிகள் பற்றிய பிரச்சாரமாக, எங்களை மூளைச்சலவை செய்வதாகவே இருக்கும். நான் 1993ம் ஆண்டில் பிறந்தேன். சுதந்திரம் அல்லது மனித உரிமைகள் என்ற வார்த்தைகளை நான் அறிவதற்கு முன்னரே, நான் கடத்தப்பட்டேன். வட கொரியர்கள், சுதந்திரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர். எனக்கு ஒன்பது வயது நடந்தபோது, எனது நண்பரின் தாய் பொதுவில் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்தேன். ஹாலிவுட் திரைப்படம் பார்த்ததே அந்தத் தாய் செய்த குற்றம். வட கொரிய அரசின் பெருமையெல்லாம், ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைக் கைது செய்தது அல்லது தூக்கிலிட்டதாகும். நான் நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, சிணுங்கக் கூடாது என்று என் தாய் எச்சரித்திருந்தார். பறவைகளும் எலிகளும் எனது குரலைக் கேட்கவில்லை. நான் ஓசை எழுப்பினால், வட கொரிய சர்வாதிகாரி எனது மனதை வாசித்துவிடுவார் என்பதால் அவ்வாறு கூறப்பட்டேன். எனது தந்தை வட கொரியாவைவிட்டுத் தப்பித்துச் சென்றபிறகு, அவர் சீனாவில் இறந்தார். நான் அவரை அதிகாலை மூன்று மணிக்கு இரகசியமாக அடக்கம் செய்ய வேண்டியிருந்தது. அச்சமயத்தில் எனக்கு வயது பதினான்கு. அச்சமயத்தில் என்னால் அழக்கூட முடியவில்லை, ஏனென்றால் நான் வட கொரியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுவிடுவேன் என அஞ்சினேன். நான் வட கொரியாவைவிட்டுத் தப்பித்துவந்த நாளில், என் தாய், சீன மனித வர்த்தகர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைப் பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது. அந்த ஆள் என்னையும் குறி வைத்தார். பெண்கள் பலவீனமானவர்கள், தாய்மார் வலுவானவர்கள் என்று ஒரு பழமொழி வட கொரியாவில் உண்டு. என்னைப் பாதுகாப்பதற்காக, என் தாய் பாலியல் வன்செயலுக்கு உள்ளாகத் தன்னை அனுமதித்தார். ஏறத்தாழ மூன்று இலட்சம் வடகொரியப் புலம்பெயர்ந்தவர்கள், சீனாவில் உள்ளனர். வட கொரியாவின் எழுபது விழுக்காட்டுப் பெண்களும், இளவயது சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சிலநேரங்களில், ஏறத்தாழ 200 டாலருக்கு அவர்கள் விற்கப்படுகின்றனர். திசைகாட்டும் கருவியின் உதவியுடன் நாங்கள் கோபி பாலைவனம் வழியாக நடந்து வந்தோம். அக்கருவி செயல்படாமல் நின்றுவிட்டபோது, விண்மீன்களைப் பின்தொடர்ந்தோம். விண்மீன்கள் மட்டுமே எங்களோடு இருந்ததாக நான் உணர்ந்தேன். சாவா, மாண்பா என்பது எங்களின் போராட்டம். வட கொரியாவுக்கு நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால், கத்தியால் எங்களையே கொல்வதற்கு நாங்கள் தயாரானோம். மனிதர்களாக வாழ்வதற்கு நாங்கள் விரும்பினோம். வட கொரியர்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்றனர். அதற்கு பல வழிகள் உள்ளன. மூன்று வழிகளைச் சொல்ல விரும்புகிறேன். ஒன்று. முதலில் வட கொரியாவில் இடம்பெறும் மனித நெருக்கடிகள் பற்றி விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக, நீங்கள் அந்நாட்டில் நடப்பவை பற்றிய அறிவைப் பெறுங்கள். இரண்டு. சுதந்திரத்திற்காக வெளியேற முயற்சிக்கும் வடகொரியப் புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுங்கள். வட கொரியப் புலம்பெயர்ந்தவர்களை, மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்பும் சீனாவின் திட்டத்திற்கு உலகளாவிய அரசுகள் அழுத்தம் கொடுத்து அதைத் தடை செய்யத் தூண்டுங்கள். வட கொரியாவின் நிலையை விளக்க இயலாது. எந்த ஒரு மனிதரும் அவர் பிறந்த இடத்தை வைத்து நசுக்கப்பட தகுதியுள்ளவர் அல்ல. வட கொரிய அரசின்மீது கவனம் செலுத்துவதைவிட, மறக்கப்பட்ட அந்நாட்டு மக்கள்மீது மிகுந்த அக்கறை காட்டுங்கள்.

வட கொரிய கம்யூனிச நாடு, ஐ.நா. பாதுகாப்பு அவையின் வேண்டுகோளையும் புறக்கணித்து, ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அந்நாட்டில் அப்பாவி பொது மக்கள் துன்புறுவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இக்காலத்தில், உலகில் எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும், ஒருசிலரின் பேராசை மற்றும் அதிகார மோகத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், அழகான நகரங்கள் அழிக்கப்படுவதையும் காண முடிகின்றது. இரத்தம் சிந்தும் போர்களில் எண்ணற்ற அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். நல்ல நோக்கத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்லப்படும் போர்களிலும்கூட அப்பாவி மக்களே பெருமளவில் பலியாகின்றனர். இஞ்ஞாயிறன்று, பிபிசி ஊடகத்தில் வெளியான செய்தியின்படி, சிரியாவில் பல ஆண்டுகளாக நடந்துவரும் சண்டையில், இவ்வாண்டின் செப்டம்பரில் அதிகமான உயிரிழப்புகள் இடம்பெற்றன எனத் தெரியவருகிறது. பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு குழு (SOHR), வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பரில், 995 அப்பாவி குடிமக்கள் உட்பட, 3,300க்கும் அதிகமான பேர் இறந்துள்ளனர். அப்பாவி குடிமக்களின் இறப்பில் ஏறத்தாழ எழுபது விழுக்காடு, இரஷ்யப் படைகள், சிரிய இராணுவம் அல்லது கூட்டணிப்படைகளின் வான்வழித் தாக்குதல்களே காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு உலகில் எங்குச் சென்றாலும், தற்கொலைக் குண்டு வெடிப்பு தாக்குதல்கள், சமயத் தீவிரவாதம், இனப் பாகுப்பாட்டுச் சண்டை போன்ற இரத்தம் சிந்தும் மோதல்களையே காண முடிகின்றது. வன்முறையற்ற உலகை உருவாக்க முயற்சிக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம், மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த அக்டோபர் இரண்டாம் தேதியை, உலக அகிம்சை தினமாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. ஐ.நா. பொது அவை, 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்த உலக நாளை அறிவித்தது.

முதல் உலகப் போர் தொடங்கியபோது, பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் காந்திஜியை அழைத்துப் போரில் ஆங்கிலேயருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். காந்திஜியும் வல்லபாய் படேலுடன் ஊர் ஊராகச் சென்று போருக்கு ஆள் சேர்க்க முயற்சி செய்தார். “அகிம்சை வழியைப் பின்பற்றும் நீங்கள் போருக்கு ஆள்சேர்ப்பது தங்கள் கொள்கைக்கு எதிராக இருக்கிறதே”என்று சிலர் கேட்டார்கள். அப்போது, காந்திஜி, “இதில் என்ன விரோதம் இருக்கிறது. எந்தவிதமான ஆயுதப் பயிற்சியும் பெறாமல் இருக்கிற நமக்கு, ஆயுதப் பயிற்சிபெற இது ஒரு வாய்ப்பு. இச்சமயத்தில் நாம் செய்யும் உதவியால் ஆங்கிலேய அரசின் நம்பிக்கையைப் பெறமுடியும், முக்கியமாகத் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதும், அகிம்சையின் ஓர் அங்கம்”தான் என்றார். காந்திஜி அவர்களின் சத்யாக்கிரக சாதனம்தான் இந்தியாவின் போராட்ட முகத்தை முழுவதுமாக மாற்றிப்போட்டது. சத்யாக்கிரகம் என்பது அடுத்தவர்களைக் காயப்படுத்தும் வேலை அல்ல. மாறாக, மற்றவர்களின் மனதை இளக வைப்பது என்றார் காந்திஜி. இதன்மூலம் எதிரிகளை எளிமையாக வென்றுவிடலாம் என்பது அவரின் நம்பிக்கை.

வன்முறை, நன்மையைச் செய்வதுபோல் தோன்றினாலும், அந்த நன்மை நிரந்தரமற்றது. அது கொணரும் தீமை நிரந்தரமாகி விடுகிறது என்றார் காந்திஜி. அகிம்சை என்பது, அநீதிகளை அமைதியாக ஏற்றுக்கொள்வது அல்ல, மாறாக, நாம் நம் உரிமைகளுக்காகப் போராட வேண்டியது, அநீதிகளை எதிர்க்க வேண்டியது என்றார் தலாய் லாமா. அகிம்சை என்பது, வெளிப்புற உடலளவிலான வன்முறையை மட்டுமல்லாமல், மனத்தளவிலும் வன்முறை உணர்வுகளைத் தவிர்ப்பதாகும் என்றார் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். அமைதியைக்கொண்டுவர துப்பாக்கிகளும், குண்டுகளும் தேவையில்லை. அதற்கு அன்பும், கருணையுமே அவசியம் என்றார் புனித அன்னை தெரேசா. அக்டோபர் 02, இத்திங்களன்று நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த நாள். நம் துன்பங்கள் உட்பட, அனைத்துமே இவ்வுலகில் நிரந்தரம் அல்ல என்றார் இவர். வன்முறையை விரும்பாத, அறவழியைப் போதித்த, கரம்வீரர் காமராஜர், காந்திஜி போன்ற உன்னதத் தலைவர்களை நினைவுகூரும் இந்நாளில், நாம்மும், இவர்களைப் பின்பற்றி, உடலளவிலும், மனத்திலும் வன்முறை உணர்வுகளை அகற்றி வாழ்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.