2017-10-02 15:51:00

கொடுப்பது, கொடுப்பவரையும், பெறுபவரையும் மகிழ்விக்கின்றது


அக்.02,2017. நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் வழங்கியுள்ள மாபெரும் நன்கொடை வாழ்வு, இந்த வாழ்வு, படைப்பு என்னும் மற்றொரு நன்கொடையின் ஓர் அங்கம் என்றும், படைக்கப்பட்ட அனைத்தும் பல்வேறு வடிவங்களில் அழிந்துவிடாமல், தகுந்த விதமாய் அவற்றைப் பாதுகாப்பது நமது கடமை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அக்டோபர் 04, வருகிற புதனன்று சிறப்பிக்கப்படும் “நன்கொடை 2017” நாளையொட்டி, இத்தாலிய நன்கொடை நிறுவனம் (IID) நடத்திவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் 150 பிரதிநிதிகளை, இத்திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

கடவுளின் நன்மைத்தனத்திலிருந்து இலவசமாகப் பெற்ற இப்பூமிக் கோளம், கடும் சுற்றுச்சூழல் பிரச்சனையை எதிர்நோக்கி வருவதை நாம் அனுபவித்து வருகிறோம், ஆயினும், இந்த இலவசக் கொடையை, முழுமையாகப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்கவேண்டியது நம் கடமை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பின் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புமாறும் கூறியத் திருத்தந்தை, நாம் இலவசமாகப் பெற்றுள்ள கொடைகள் குறித்து, இளையோருக்கு விழிப்புணர்வூட்டுவதற்கு, இந்த நன்கொடை நாள் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், தனக்காகச் செபிக்குமாறும், இத்தாலிய நன்கொடை நிறுவனம் நடத்திவரும் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.