2017-10-02 16:37:00

இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையினரிடம் திருத்தந்தை


அக்.02,2017. இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொண்ட 53 பிரதிநிதிகளை, இத்திங்களன்று திருப்பீடத்தின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின் அடையாளங்களாக மலர்ந்து, மிகச் சிறியோரில், சிறியோராக மாறுமாறு கேட்டுக்கொண்டார்.

முத்திப்பேறுபெற்ற Charles de Foucauld அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்ந்த, சபை நிறுவனர் இயேசுவின் சிறிய சகோதரி மதலேனாவின் வாழ்வை நினைவுகூர்ந்த திருத்தந்தை, சிறியவர்களுக்கு சேவையாற்றுவதற்கு அஞ்ச வேண்டாம் என்றும் கூறினார்.

இயேசுவின் சிறிய சகோதரிகள் சபை ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, இச்சபையின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகோதரிகள், உலகில் பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, சமூகத்தில் மிகவும் நலிந்த சிறியவர்களுக்கு, கல்வி வழங்குதல், நலவாழ்வு அளித்தல், மறைக்கல்வி போதித்தல் போன்றவைகளை, இவர்கள் அன்பினால் ஆற்றுவதையும் பாராட்டினார். சபை ஆரம்பித்தபோது இருந்த இறையனுபவத்தைத் தொடர்ந்து காக்குமாறும், இச்சபையினர் ஆன்மீக வாழ்வில் உறுதியாய் வாழுமாறும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாழ்வே இளையோரைக் கவரும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.