2017-09-30 16:02:00

“பயணத்தைப் பகிர்வோம்” நடவடிக்கையில் தலத்திருஅவைகள்


செப்.30,2017. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்வோர்க்கு ஆதரவாக, அகில உலக காரித்தாஸ் நிறுவனம், உலக அளவில் ஆரம்பித்துள்ள, “பயணத்தைப் பகிர்வோம்” என்ற ஈராண்டு நடவடிக்கையில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், பங்களாதேஷ் காரித்தாஸ் நிறுவனம் உட்பட பல்வேறு தலத்திருஅவைகள் இணைந்துள்ளன.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெறும் “பயணத்தைப் பகிர்வோம்” நடவடிக்கைக்கு, அந்நாட்டு ஆயர் பேரவை, CRS எனப்படும் கத்தோலிக்க நிவாரணப் பணிகள் அமைப்பு, CCUSA எனப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டு பிறரன்பு அமைப்புகள் ஆகியவை உதவி வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றும் CRS அமைப்பும், CCUSA அமைப்புகளும்,  அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தில் உறுப்புகளாக உள்ளன.

மேலும், மியான்மாரிலிருந்து ஏறக்குறைய ஐந்து இலட்சம் ரொஹிங்கியா மக்கள் பங்களாதேசில் அடைக்கலம் தேடியுள்ளவேளை, இம்மக்களுக்கும், குடிபெயர்வோர்க்கும் சிறப்பாக சேவையாற்றி வருகின்றது, பங்களாதேஷ் காரித்தாஸ் நிறுவனம்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் புலம்பெயர்ந்தோருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், பங்களாதேஷ் நாட்டின் டாக்காவில், தன் பணிகளை ஆற்றி வருகின்றது, காரித்தாஸ் நிறுவனம். 

ஆதாரம் : AsiaNews /Fides/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.