2017-09-30 15:39:00

ஊழல், தன்னலப்போக்கு இல்லாத நகரத்தை அமைக்குமாறு...


செப்.30,2017. புதிய எருசலேம் விரும்பும் ஒரு நகரம், உண்மையான ஒருமைப்பாட்டின்மீது அடித்தளமிடப்பட்ட, ஒரு மனித சமூகமாகும் என்றும், இந்நகரத்தில், பொறாமை, கட்டுப்பாடில்லாத இலக்குகள், பகைமையுணர்வு ஆகியவை வளராமல் இருக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய நகரசபைகளின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

ANCI எனப்படும், இத்தாலிய நகரசபைகளின் தேசிய கழகத்தின் ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்மாதிரியான ஒரு மாநகரம் அல்லது நகரம் எவ்வாறு அமைய வேண்டுமென்பதை விளக்கினார்.

நகரசபைகளின் தலைவர்களும், அதிகாரிகளும், பொதுநலனில் தாகம் கொண்டவர்களாகவும், தங்களின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளைப் பார்வையிடுமாறும் கூறியத் திருத்தந்தை, பொதுநலனில் அக்கறை கொள்ளும், நல்ல மற்றும் பரந்த இதயத்துடன் பணியாற்றும் ஒரு நகரத்தை அமைக்குமாறும் வலியுறுத்தினார்.

ஏழைகள் மற்றும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு கதவுகளை இறுக்க மூடும், அதிவேக நகரங்களை உருவாக்க வேண்டாமெனவும், சமூக நீதி, வேலைவாய்ப்புகள், சேவைகள் போன்றவை மிகுந்த நகரங்களை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மனிதாபிமானம் நிறைந்த, அறநெறிக்கோட்பாடுகளின்மீது அமைக்கப்பட்ட, யாரையும் ஒதுக்காமல் எல்லாரையும் வரவேற்கின்ற, புதிய ஓர் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்குச் சேவையாற்றும் நகரத்தை உருவாக்குமாறும் கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும், மேயர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.