2017-09-29 14:50:00

மனித குலத்தை பாதுகாப்பதில் மதங்களின் பங்களிப்பு


செப்.29,2017. பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு என்பது, அரசுகளின் குற்றவியல் சட்டங்களின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என கருதப்பட்டாலும், இதில் மதத்தலைவர்களின் கடமை குறித்தும் சிந்திப்பது அவசியம் என, அழைப்பு விடுத்தார், திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் பால் காலகர்.

மெசபொத்தோமியா நாகரீகத்தின் காலத்திலிருந்தே, சமூக ஒழுங்கை காப்பாற்றும் நோக்கில், மனிதரையும் அவர் உடைமைகளையும் காப்பாற்ற உதவும் குற்றவியல் சட்டங்கள் இருந்து வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர், சமூக ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பு, ஆட்சியாளர்களின் கடமையாக இருந்தது என்பதை, காலம் காலமாக இடம்பெற்றுவரும் வளர்ச்சிகளில் கண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

முதலாவதாக, இன ஒழிப்பு, போர் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் அரசுகளின் பொறுப்பு, இரண்டாவதாக, தனி அரசுகள் மக்களைப் பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகளில் அனைத்துலக சமூகம் உதவுதல், மூன்றாவதாக, ஓர் அரசு தன் மக்களைப் பாதுகாக்கத் தவறும்போது, உரிய நேரத்தில் கூட்டுநடவடிக்கை வழியாக, அனைத்துலக சமூகம் அம்மக்களைக் காக்க முன்வருதல், போன்ற மூன்று வழிமுறைகளை, ஐ.நா.வின் 60வது பொது அவை முன்வைத்ததையும் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் காலகர் அவர்கள், மனித மாண்பு காக்கப்படும் என்பதை, அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில், மனிதகுலத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அவைகள் அறிந்தே உள்ளன என்றார்.

மனிதகுலம் காக்கப்படும் நோக்கில் உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்களுக்கும், உண்மை மதங்கள் கற்பிக்கும் மதிப்பீடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் காலகர்.        

சகிப்பற்றதன்மைகளுக்கும், பிரிவினை வாதங்களுக்கும் தங்களைக் கையளிக்காமல், மதிப்பையும், பலன்தரும் பேச்சுவார்த்தைகளையும் உண்மை மதங்கள் ஊக்குவித்துவரும் நிலையில், அவைகள், வன்முறையின் ஆதாரங்களாக அல்ல, மாறாக அமைதியின் ஊற்றுக்களாக உள்ளன என்ற பேராயர், இத்தகைய மதிப்பீடுகள் கப்பாற்றப்படும்போது, இறைவனின் பெயரால் மனிதனைப் பாகுபாட்டுடன் நடத்துவதும், கொலை செய்வதும் மறைந்துபோகும் எனவும் தெரிவித்தார்.

மக்களையும் அவர்களின் உடைமைகளையும் காப்பாற்றும் பணியில் தங்கள் பங்கை அளிப்பது, மதத்தலைவர்களின் கடமையாகிறது என்பதை வலியுறுத்தினார் பேராயர் காலகர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.