2017-09-29 14:32:00

. நம் மீட்புப் பாதையில் ஒத்துழைப்பாளர்கள் இறைத்தூதர்கள்


செப்.29,2017. மூன்று அதிதூதர்களின் திருவிழாவையொட்டி இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவனின் மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்பதற்கு அழைப்பு, நம்மைப் போலவே அதிதூதர்களுக்கும் உள்ளது’ என்று கூறினார்.

இறைவனின் அருகிலிருந்து பணியாற்றி, அவர் புகழ்பாடி, அவர் முகத்தின் மகிமையை ஆழமாகத் தியானித்துவரும் இறைத்தூதர்களை, நம் வாழ்வில் துணையாளர்களாக இறைவன் அனுப்புகிறார் என்றுரைத்த திருத்தந்தை, மிக்கேல், இரஃபேல், கபிரியேல் ஆகிய மூன்று இறைத்தூதர்களும், மீட்பை நோக்கிய நம் பாதையில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளார்கள் என்று கூறினார்.

வானகத்தை நோக்கிய நம் பாதையில், தீயவனை எதிர்த்துப் போரிட மிக்கேல் அதிதூதரும், இயேசுவின் நற்செய்தியை நமக்கு நினைவூட்டுவதில் அதிதூதர் கபிரியேலும், நம் பயணத்தில் தவறான அடிகளை எடுத்து வைக்காமல் காப்பாற்றுவதில் அதிதூதர் ரஃபேலும் நமக்கு உதவுகின்றனர் என, தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இறைவனுக்கு ஆற்றும் சேவையில், நம் உடனுழைப்பாளர்களாக இருக்கும் இம்மூவரையும் நோக்கிச் செபிப்போம் என விண்ணப்பித்து, செபித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.