2017-09-29 14:26:00

பாசமுள்ள பார்வையில்...: பயம் போக்கிய தாய்


அந்தச் சிறுமி தனது ஆறு வயதில் வீணை கற்றுக்கொள்ளத் துவங்கினார். இப்போது ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்னும் மேடையேறி வீணை வாசித்ததில்லை. ஆனால் அவரின் பெற்றோருக்கோ தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஒரு சின்ன அரங்கேற்றம் செய்துவிடவேண்டும் என தீராத ஆசை. அச்சிறுமிக்கோ மேடை என்றாலே பயம். அப்பா, அம்மாவின் முன்னிலையில் எத்தனையோ முறை பயமின்றி சிறப்பாக வாசித்திருக்கிறார். இப்போதோ மற்றவர்கள் முன்னிலையில் வாசிக்கப் பயமாக இருந்தது. ஒருநாள் அவர் அம்மா கூறினார், 'சுமதி, நீ மேடையில் வீணை வாசிக்கவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. உனக்கு பயம் என்றால் மற்றவர்கள் யாரும் வேண்டாம். நானும் அப்பாவும் மட்டும் வந்து அரங்கில் அமர்கிறோம். நீ மேடையில் வாசிப்பதை, அப்பா போட்டோ எடுப்பார்கள், சரியா' என்று கேட்டார். பயப்படவும் தேவையில்லை, பெற்றோரின் நெடுநாள் ஆசையையும் நிறைவேற்றியதுபோல் ஆகும், என மகிழ்ச்சியுடன் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டார் சுமதி. அந்த நாளும் வந்தது. மேடைக்குப் பின்புறம் வந்து அலங்கரித்துக்கொண்டு தயாராக சுமதி நிற்க, திரை விலகியது. சிறுமியும் கும்பிட்டுவிட்டு மேடையில் அமர்ந்தார். தந்தையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். முன்னால் பார்த்தார் சுமதி, எதுவுமே தெரியவில்லை. ஒரே இருட்டு. முன்வரிசை இலேசாகத் தெரிந்தது. அதில் அவர் பெற்றோர் அமர்ந்திருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது. பின் வரிசையில் யாருமில்லை, ஒரே இருட்டாக இருந்தது. பயமின்றி, சந்தோசமாக வீணை வாசித்தார் சுமதி. பல்வேறு இராகங்களை ஒரு மணிநேரம் இசைத்தபின், அரங்கில் விளக்குகள் போடப்பட்டன. ஒரே கைதட்டல். ஐந்து நிமிடங்களுக்கு கைதட்டல் நீடித்தது. ஆம். முதல் மூன்று வரிசைகள் காலியாயிருக்க, மீதி அனைத்தும் மக்களால் நிரம்பி வழிந்திருந்தது. இவ்வளவு கூட்டத்திற்கு முன்னாலா வாசித்தேன் என அசந்துபோன சுமதி, அன்றுமுதல் மேடை பயத்திற்கு விடை கொடுத்தார். அம்மாவைப் பார்த்தார் சுமதி. அந்த தாய் சொன்னார், ‘சுமதி மன்னித்துவிடு. உனக்குப் பயம் வரக்கூடாது என்பதற்காகத்தான், நீ வருவதற்கும் ஒரு மணிநேரத்திற்கு முன்னரே நம் நண்பர்களையும், உறவினர்களையும் வரச்சொல்லி அமைதியாக இருக்கச் சொல்லி விளக்குகளை அணைத்துவிட்டோம். மேடையில் பிரகாசமான விளக்குகள் உன்னை நோக்கி இருந்ததால், இருட்டுப் பகுதியில் அமர்ந்திருந்த மக்களை உன்னால் பார்க்க முடியவில்லை. உன் நிலையையும் எங்கள் வேண்டுகோளையும் புரிந்து, மதித்து நடந்த நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நாம் நன்றி கூறவேண்டும்' என்றார். தாய் செய்த இந்த ஏற்பாட்டை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டார் சுமதி.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.