2017-09-28 18:10:00

இளையோர் தங்கள் அழைப்பை உணர, விசுவாச ஒளி உதவட்டும்


செப்.,28,2017. பெலாருஷ்யாவின் மின்ஸ்க் நாகரில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய ஆயர்கள் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களையும் ஊக்கத்தையும் தெரிவித்து  செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால்  திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஐரோப்பிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு அனுப்பியுள்ள இச்செய்தி, பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடையே மேய்ப்புப்பணி சார்ந்த ஒத்துழைப்பையும், ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் இக்கூட்டம் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஆயர்களிடையே நிலவும் ஒன்றிப்பை, மேலும் பலமுள்ளதாக மாற்ற உதவும் இக்கூட்டத்திற்கு, திருத்தந்தை தன் ஆசீரை வழங்குவதாகவும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.

இளையோரின் நிலை குறித்து விவாதிக்க உள்ள இந்த ஆயர்கள் கூட்டம், திருஅவையிலும் சமூகத்திலும் தங்கள் அழைப்பை இளையோர் விசுவாச ஒளியில் கண்டுகொள்ள உதவும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கையும் இந்த செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டம் இப்புதன் முதல் ஞாயிறு வரை பேலாருஷ்யா நாட்டின் மின்ஸ்க் நகரில் இடம்பெற்று வருகிறது.

45 ஐரோப்பிய நாடுகளின் ஆயர் பேரவைகளின் தலைவர்கள் பங்குபெறும் இக்கூட்டத்தின்போது, பெலாருஷ்யா நாட்டில் முதன் முதலாக அம்மொழியில் விவிலியம் அச்சிடப்பட்டதன் 500ம் ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது.

இன்றைய இளையோரின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள், அச்சங்கள், உறவுகள், சவால்கள் என பல கோணங்களில் இளையோர் குறித்து விவாதிக்க உள்ள இக்கூட்டம், 2018ம் ஆண்டின் இளையோர் குறித்த உலக ஆயர் மன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இக்கூட்டத்தில், ஐரோப்பாவை பொது இல்லமாக கட்டியெழுப்புவதில் திருஅவையின் பங்கு குறித்தும், ஐரோப்பாவில் மீண்டும் நற்செய்தியை இணைந்து அறிவிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர் ஆயர்கள்.

பெலாருஷ்யா அரசுத்தலைவர் Aleksandr Lukashenko அவர்களை சந்தித்து உரையாடியுள்ள ஆயர்கள், இக்கூட்டத்தின் இறுதி நாளான, வரும் ஞாயிறன்று, மின்ஸ்க் நகரின் பங்குதளங்களில் திருப்பலி நிறைவேற்றி கத்தோலிக்கர்களுடன் உரையாடுவர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.