2017-09-28 17:45:00

மனச்சான்றின் குரலைக் குறித்தல்ல,அதை மறைப்பது குறித்தே அஞ்சுக


செப்.,28,2017. நம் பாவங்களைக் குறித்து அறிந்தவர்களாக, நம் வாழ்வின் உண்மைகளை இறைவனிடம் எடுத்துரைத்து மன்னிப்பை வேண்டுவதற்கு நாம் அஞ்சவேண்டாம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஏரோது இயேசுவைக் குறித்து குழம்பிப்போய், அவரை சந்திக்க வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்ததைப் பற்றி பேசும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மேற்கோள் காட்டி, குழம்பிப்போன ஒரு மனம், இயேசுவைக் கண்டு தன்னை சமாதானப்படுத்த முயல்வதை இங்கு காண்கிறோம் என்றார்.

நாம் ஒரு தவறு செய்யும்போது, நம் மனச்சான்று நம்மை குத்துகிறது, அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விட்டுவிடும்போது, அது மரத்து விடுகிறது, ஆனால், அது நம்மை குத்தும்போது, நாம் அந்த தீமையைக் குறித்து நினைவூட்டப்படுவது மட்டுமல்ல, அதை உணரவும் செய்கிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குற்ற உணர்வின் வேதனை, இதயத்திலும், உடலளவிலும், ஆன்மாவிலும் உணரப்படும்போது, அதை மீண்டும் கேட்காமலிருக்கும்வண்ணம் மறைக்கும் சோதனைகளும் எழுகின்றன எனவும் திருத்தந்தை கூறினார்.

நம் குற்றங்களைக் குறித்து நம் மனச்சான்று இடித்துரைப்பதை உணர்வது என்பது, நமக்கு கிட்டியுள்ள அருளே என உரைத்த திருத்தந்தை, பல வேளைகளில், பிறரின் பாவங்களை உற்றுநோக்கும் நாம், நம் பாவங்களைக் குறித்து சிந்திக்க மறக்கிறோம் எனவும் உரைத்தார்.

பாவத்தினால் நாம் உறுத்தப்படும்போது, மனச்சான்றின் குரலுக்கு செவி மடுத்து, இறைவனிடம் செபித்து அமைதி பெறுவோம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் பாவங்கள் குறித்து மனச்சான்று தரும் வேதனையே, மீட்பின் அடையாளங்கள் என்ற திருத்தந்தை, மனச்சான்றின் குரலைக் குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை, மாறாக, அதனை மறைப்பதற்கே நாம் அஞ்ச வேண்டும் என உரைத்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.