2017-09-27 16:37:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : உரோமைக்கு வெளியே கிறிஸ்தவம் - 3


செப்.27,2017. பெர்சியாவில், தொடக்கத்தில் செசானியன் பேரரசின் (Sassanid, Sasanian Empire), அரசர்கள் கிறிஸ்தவர்களிடம் மிகவும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டாலும், சமய மற்றும் அரசியல் காரணங்களால், கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தி கொலை செய்தனர். கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் அரசர் 2ம் சப்போர் (Saphor II) காலத்தில், அதிகம் இடம்பெற்றன என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. இவரது ஆட்சியில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள், நூற்றுக்கணக்கான ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். கி.பி.309ம் ஆண்டு முதல் 379ம் ஆண்டுவரை ஆட்சி செய்த அரசர் 2ம் சப்போர் காலத்தில், பெர்சியாவின் மைய மாநிலமான Beth-Germaன் தலைநகரமான Schiahareadat ஆயர் நார்செஸ் (Narses) மற்றும் அவரோடு மறைப்பணியாற்றிய ஜோசப் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர். அச்சமயத்தில் அரசர், விடுமுறைக்காக அந்நகரில் இருந்தார். அப்போது ஆயர் நார்செஸ் அரசர்முன் அழைத்துவரப்பட்டார். அப்போது அரசர் ஆயரிடம், நரைத்த தலைமுடியைக் கொண்டவனே, எனது சொற்படி கேட்டு உனது இளம் மாணவர்களை வளரச் செய். சூரியனுக்கு வழிபாடு செய்து உனது பாதுகாப்பையும் சலுகைகளையும் பெற்றுக்கொள் என்றார். அதற்கு ஆயர் நார்செஸ் அவர்கள், உனது புகழ்மாலை ஏற்றுக்கொள்ள முடியாதது. அச்சம்நிறைந்த உலகுக்கே இது இட்டுச்செல்லும். இந்த உலகம் கொடுக்கும் அனைத்தையும் நீ அனுபவித்தாலும், அவற்றை ஏனையோருக்குக் கொடுப்பதாக நீ உறுதியளித்தாலும், அவை காலையில் கரைந்துபோகும் பனித்துளி போன்றவை. அவை ஒரு கனவு போல மறைந்துவிடும். நான் இப்போது முதுமை அடைந்துவிட்டேன். எனது குழந்தைப் பருவத்திலிருந்து கடவுளுக்குச் சேவை செய்துள்ளேன். நான் தீமைக்கு உட்படாமல், விசுவாசத்தை மறுதலிக்காமல் இருப்பதற்கு அவரிடம் மீண்டும் மீண்டும் செபிக்கின்றேன். சூரியனை வழிபடுவதைவிட நான் கடவுளின் கரங்களில் என்னை அர்ப்பணிக்கின்றேன் என்றார். உடனே அரசர் பற்களை நரநரவென கோபத்துடன் கடித்து, நீ எனக்கு கீழ்ப்படியவில்லையெனில் நீ கொலைசெய்யப்படுவாய் என்று சொன்னதும், ஆயர் Narses அவர்கள், ஓ அரசே, உனக்கு அதிகாரம் இருந்தால் என்னை ஏழுமுறை மரணத்துக்கு உட்படுத்தும். ஆனால் நான் ஒருபோதும் உனக்குப் பணியமாட்டேன் என்றார். உடனடியாக, கொலைகாரர்களின் கரங்களில் ஆயரை ஒப்படைத்தார் அரசர்.

ஆயரும், அவரோடு கைதுசெய்யப்பட்ட ஜோசப்பும் கூடாரத்திற்கு வெளியே அழைத்துவரப்பட்டனர். பெருமளவான மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். உடனே ஜோசப் ஆயரிடம், பாரும், இவர்களை நீ அனுப்பிவிடுவதற்காகக் காத்திருக்கின்றனர். நீவீர் உனது சொந்த வீட்டிற்குச் செல்லும் எனக் கூறினார். உடனே ஆயர் ஜோசப்பைக் கட்டித்தழுவி, எனதருமை ஜோசப், நீ மிகவும் மகிழ்வோடு இருக்கிறாய். இந்த உலகின் சூழ்ச்சிகளையும் சோதனைகளையும் நீ தகர்த்துவிட்டாய். விண்ணக அரசின் குறுகிய பாதையாகிய மகிழ்வில் நுழைந்துவிட்டாய் எனக் கூறினார். முதலில் ஜோசப் கொலைகாரர்களிடம் தனது தலையை நீட்டினார். அது உடனே துண்டாக்கப்பட்டது. பின் ஆயரும் தலைவெட்டிக் கொல்லப்பட்டார். இது நடந்தது கி.பி.343ம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தாம் நாள். மறைசாட்சிகள் ஆயர் நார்செஸ், ஜோசப் போன்று, அதேநேரத்தில் மேலும் பலர் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என பதிவுசெய்யப்பட்டுள்ளது. பெர்சிய இளவரசர் Ardascirusன் ஆணைப்படி, Beth-Seleucia ஆயர் ஜான் அவர்களும், Beth-Hascita அரண்மனையில் கொலைசெய்யப்பட்டார். இந்த இளவரசர், அரசர் சப்போரின் மகனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. Hulsar நகரின் Isaac என்ற அருள்பணியாளர் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். Herminum அருள்பணியாளரான Papa என்பவர், Gabal அரண்மனையில், Ardascirus இளவரசரால் கொல்லப்பட்டார். Uhanam என்ற இளம்அருள்பணியாளர், இளவரசரின் ஆணைப்படி, தீய பெண்களால் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். Sasannes, Mares, Timæus, Zaron, Bahutha, Tecla, Danacla... இவ்வாறு பல பொதுநிலை விசுவாசிகளும், அருள்பணியாளர்களும் ஆயர்களும், அரசர் சப்போரின் ஆணைப்படி, கிறிஸ்துவுக்காகக் கொலைசெய்யப்பட்டனர்.

உரோமைப் பேரரசில் கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்டபின், அப்பேரரசுக்கு வெளியே கிறிஸ்தவம் பரவத்தொடங்கியது. கிழக்கு எடிசா (Edessa) பெர்சியா, அரேபியா, மத்திய ஆசியா, சீனா, இந்தியா, அர்மேனியா, பார்த்தியா, எகிப்து, வட ஆப்ரிக்கா என கிறிஸ்தவம் பரவத்தொடங்கியது. கிறிஸ்தவ வரலாற்றில், பிற்காலத்தில், திருஅவையில் மிக முக்கியமான சில தந்தையர் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி வர்த்தகத் தொடர்புகளையும் கொண்டிருந்தது. மேற்கு மெசபத்தோமியாவில், அந்தியோக்கியாவிற்கு கிழக்கேயுள்ள Edessa, Osrhoene அரசின் தலைநகரமாகும். யூப்ரட்டீஸ் நதிப்படுகையில் அமைந்துள்ள இந்நகரம், புவியியல் அமைப்பின்படி, கிழக்கில் கிறிஸ்தவம் பரவுவதற்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. வில்லியம் ஜியங்க் என்பவரின் கூற்றுப்படி, திருத்தூதர்கள் காலத்திலே எடிசாவில் கிறிஸ்தவம் பரவியிருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஏனென்றால் அரசர் எட்டாம் Abgar ( கி.பி.179-214) கி.பி.180ம் ஆண்டுக்கு முன்னதாகவே கிறிஸ்தவராக மாறியதை வைத்து இவ்வாறு கணித்துள்ளார் எழுத்தாளர் வில்லியம் யங்க். எடிசாவிலே முதன்முதலில் கட்டப்பட்ட ஆலயம் உள்ளது என்றும் இவர் சொல்கிறார். எனவே தொடக்க காலத்திலிருந்தே எடிசாவில் கிறிஸ்தவம் செழித்து வளர்ந்தது என உறுதியாகச் சொல்லலாம் என்பது இவரின் கணிப்பு.  எடிசாவில் நம் மீட்பரின் பாடுகளை ஒவ்வோர் ஆண்டும் தியானித்து கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.