2017-09-27 16:16:00

“பயணத்தைப் பகிர்வோம்”நடவடிக்கைக்கு திருத்தந்தை நன்றி


செப்.27,2017. உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ள “பயணத்தைப் பகிர்வோம்” என்ற நடவடிக்கைக்குத் தனது ஆதரவையும், நன்றியையும் தெரிவித்த அதேவேளை, புலம்பெயர்வோர், குடிபெயர்வோர், மற்றும் புகலிடம் தேடுவோரை, உரத்த குரலில், மிகத்தெளிவாக வரவேற்றுப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற பொது மறைக்கல்வியுரையில் இவ்வாறு பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை சிறப்பாக வரவேற்றார்.

நாம் புலம்பெயர்வோரை அரவணைப்பது, நம் பொதுவான பயணத்தில் ஒவ்வொருவரையும் அரவணைக்கும் தாய்த் திருஅவையைக் குறித்து நிற்கும்,  வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள தூண்களின் அமைப்பை ஒத்திருக்க வேண்டும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்வோர்க்கு ஆதரவாக, தங்களை அர்ப்பணித்துவரும் காரித்தாஸ் நிறுவன உறுப்பினர்களுக்கும், ஏனைய திருஅவை நிறுவனங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, இவர்கள், திறந்த மனது கொண்ட, எல்லாரையும் ஏற்கும் மற்றும் வரவேற்கும் திருஅவையின் அடையாளங்கள் எனவும் கூறினார்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர், இதில் கலந்துகொண்ட ஏறத்தாழ ஐம்பது புலம்பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டத்தின் பங்குத்தளங்கள் பராமரித்து வரும் புலம்பெயர்ந்தவர்களில் ஐம்பது பேர் இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டனர்.

மேலும், கரீபியன் தீவுகளில், குறிப்பாக, புவர்த்தோ ரிக்கோவில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் செபிக்குமாறும் இப்புதனன்று கேட்டுக்கொண்டுள்ளார்

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் இஸ்பானிய மொழியில் உரையாற்றும்போது, இவ்வாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார் .

மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த மரியா கடும் புயல், கடந்த 85 ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பகுதியில் கடுமையாய்த் தாக்கிய புயலாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.