2017-09-27 16:22:00

வின்சென்ட் தெ பவுல் துறவுக் குடும்பத்தினருக்கு செய்தி


செப்.27,2017. வின்சென்ட் தெ பவுல் சபை தொடங்குவதற்குக் காரணமான தனிவரம்  வழங்கப்பட்டதன் நானூறாம் ஆண்டை முன்னிட்டு, அத்துறவுக் குடும்பத்தினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மிக அதிகத் தேவையில் இருப்போருக்காக, புனித வின்சென்ட், பிறரன்பு சகோதரத்துவ சபைகளைத் தொடங்கினார் என்றும், ஏழைகளிடம் செல்லும்போது இயேசுவைச் சந்திக்கிறாய் என்ற இலக்குடன் இச்சபையினர் செயல்படுகின்றனர் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, 1617ம் ஆண்டில் சிறிய கடுகு விதையாக ஊன்றப்பட்ட இச்சபை, தற்போது மிகப்பெரிய மறைப்பணி சபையாக வளர்ந்துள்ளது என்றும் பாராட்டியுள்ளார்.

புனித வின்சென்ட் தன்னை ஒருபோதும் பெரிய ஆளாகக் கருதியது கிடையாது என்றும், அவரின் சான்றுபகரும் வாழ்வு, ஆண்டவரின் வார்த்தையையும், அவர் நம்மீது பதித்திருக்கும் கண்களையும், எப்போதும் வியப்போடு நோக்க வைக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இதயத்தின் ஏழ்மைக்கும், எப்போதும் எதற்கும் தயாராக இருப்பதற்கும், தாழ்மையில் பணிவிற்கும், இப்புனிதர் நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்றும், பிறரன்பு என்பது, உண்மையில் கடந்தகால நற்செயல்களில் திருப்தியடையாமல், நிகழ்காலத்தில் அச்செயல்களை ஆற்றுவதற்கு நம்மைத் தூண்டுகின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

பசித்திருப்பவர், தாகமாயிருப்பவர், அந்நியர், ஆடையின்றி இருப்பவர், மாண்பிழந்து நிற்பவர், நோயுற்றோர், கைதிகள், சந்தேகத்தில் வாழ்வோர், அறியாமையில் உழல்வோர், பாவத்தில் தொடர்ந்து நிலைத்திருப்போர், துன்புறுவோர், கோபப்படுவோர், எரிச்சலூட்டுவோர் போன்ற, சகோதர சகோதரிகளில் ஆண்டவர் இயேசுவைக் காண்பதற்கு, திருஅவைக்கும், வின்சென்ட் தெ பாவுல் சபையினருக்கும் ஆண்டவர் வரம் அருள்வாராக எனவும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித வின்சென்ட் சபையின் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும், அருள்சகோதரர்களும் 86 நாடுகளில் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பதிலும், அருள்பணியாளர்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.