2017-09-27 16:24:00

பாசமுள்ள பார்வையில்…., : தாய் காட்டிய பாசத்திற்கு மறுமொழி


அன்று பள்ளியில் இலவச மதிய உணவருந்திவிட்டு, மாணவர்கள் அனைவரும் ஒருவித தூக்க கலக்கத்தில் பாடங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் சரவணன் என்ற சிறுவன் எழுந்து, 'டீச்சர், என் பையில் வைத்திருந்த ஐந்து ரூபாயைக் காணவில்லை. சாயங்காலம் அம்மாவுக்கு மருந்து வாங்கிவிட்டுப் போவதற்காக வைத்திருந்தேன்' என்று முறையிட்டான். ஆசிரியருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒவ்வொருவராகக் கேட்டுப் பார்த்தார். எவருமே எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த வரிசையில் நின்றிருந்த இராமுவின் முறை வந்தபோது அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அனைவரின் பார்வையும் அவன் மீது விழுந்தது. அந்தப் பள்ளியிலேயே மிகவும் ஏழை மாணவன் அவன்தான். ஆகவே, அவன் எடுத்திருக்க வாய்ப்பு அதிகம் என சந்தேகப்பட்டனர். இல்லையென்றால் அவன் இவ்வளவு நடுங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லையே!. ஆசிரியர், அவன் கால்சட்டை பாக்கெட்டில் கைவிட்டு துழாவினார். ஒரு பொட்டலம் இருந்தது. ‘இதில் என்ன வைத்திருக்கிறாய்’ என்றார் ஆசிரியர். நடுங்கிக்கொண்டே, பதில் சொல்லாமல் நின்றான் இராமு. அதைப் பிரித்துப் பார்த்தார் ஆசிரியர். அதில் சிறிய அளவு இலவச மதிய உணவிருந்தது. 'எதற்காக பள்ளியில் கொடுத்த மதிய உணவைப் பொட்டலமாகக் கொண்டு போகிறாய்' என்று ஆச்சரியமாகக் கேட்டார் ஆசிரியர். 'இல்லை டீச்சர். எங்க அம்மாவுக்கு மூன்று நாட்களாக உடம்பு சரியில்லை. அதுதான், எனக்குக் கொடுத்த மதிய உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை எடுத்துப் போகிறேன். மன்னிச்சுடுங்க டீச்சர்' என்றான் இராமு. ஆசிரியைக்கு கை நடுங்கியது. மற்ற மாணவர்களோடு சேர்ந்துகொண்டு தானும் இராமுவை முதலில் சந்தேகப்பட்டது குறித்து மனம் கலங்கினார் ஆசிரியர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி                           
All the contents on this site are copyrighted ©.