2017-09-26 15:25:00

அணு ஆயுதமற்ற உலகுக்கு ஐ.நா.வில் திருப்பீடம் அழைப்பு


செப்.26,2017. போர்களைத் தடுக்கவும், மனித மாண்பைப் பாதுகாக்கவும், அணு ஆயுதமற்ற உலகை உருவாக்கவும், அரசுகள் அதிகமான முயற்சிகள் எடுக்குமாறு, ஐ.நா.வில் அழைப்பு விடுத்தார், திருப்பீட அதிகாரி பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

‘மக்கள்மீது கவனம் செலுத்துதல் : நிலையான பூமிக்கோளத்தில் அமைதி மற்றும் தரமான வாழ்வுக்கு நடவடிக்கை எடுத்தல்’ என்ற தலைப்பில், ஐ.நா. பொது அவையின் 72வது அமர்வில், இத்திங்களன்று உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் பால் காலகர் அவர்கள், இவ்வாறு கூறினார்.

அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இரு தூண்களாக அமைந்துள்ள, வாழ்வதற்கு உரிமை, சமய சுதந்திரம் ஆகியவை பற்றி உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு, ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்கும், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தமும் நம்பிக்கை தரும் அடையாளங்கள் எனவும் கூறினார்.

ஆயினும், இந்த ஒப்பந்தங்களைச் சிறப்பாக அமல்படுத்த, நாடுகள், சட்டமுறைப்படியும், அரசியல் முறைப்படியும் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார், பேராயர் காலகர்.

வன்முறை மற்றும் ஆயுத மோதல்களைத் தடுக்க வேண்டும், ஆயுத மோதல்களின்போது அப்பாவி பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும், இவற்றுக்கு அஞ்சி வெளியேறும் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், மனித வர்த்தகத்திற்கு எதிராக உழைக்க வேண்டும், அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஐ.நா.வில் முன்வைத்தார் பேராயர் காலகர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.