2017-09-26 15:13:00

திருத்தந்தை, ஆர்த்தடாக்ஸ் பேராயர் ஹிலாரியோன் சந்திப்பு


செப்.26,2017. “மரணத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கு, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதன் வழியாக, இந்த உலகை அணு ஆயுதங்களற்ற உலகமாக மாற்றுவதற்கு நம்மை அர்ப்பணிப்போம்” என, இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 26, இச்செவ்வாயன்று, அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு உலகினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகில் அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலை உணர்ந்த ஐ.நா.பொது அவை, 2013ம் ஆண்டு டிசம்பரில், செப்டம்பர் 26ம் தேதியை, அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்கும் உலக நாளாக அறிவித்தது.

உலக அளவில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்கு, இன்னும் ஐம்பது நாடுகளின் கையெழுத்து தேவைப்படுகின்றது என, ஐ.நா. கூறுகின்றது. இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானில் இரு அணு குண்டுகள் போடப்பட்டு எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்றும் உலகில், ஏறத்தாழ 15 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.    

மேலும், இச்செவ்வாய் நண்பகலில், சாந்தா மார்த்தா இல்லத்தில், மாஸ்கோ முதுபெரும் தந்தையின் வெளியுறவுத் துறைத் தலைவர் பேராயர் ஹிலாரியோன் அவர்களைச் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.