2017-09-26 14:54:00

இயேசுவோடு நட்புறவு கொள்வது நம்மை விடுதலையாக்கும்


செப்.26,2017. இயேசுவோடு நட்புறவு கொள்வது நம்மைச் சுதந்திர மனிதர்களாக மாற்றும் என்று, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள் என்று இயேசு கூறிய, இச்செவ்வாய் திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுக்கு, குடும்பம் என்பது, இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுவதே என்று கூறினார்.

கடவுளோடும், இயேசுவோடும் பரிச்சயமாக, நல்லுறவுடன் வாழ்வதென்பது, சீடர்களாக அல்லது நண்பர்களாக இருப்பதைவிட ஒருபடி மேலானது என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நம்மைச் சிந்திக்க அழைக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் இல்லத்தில் நுழைந்து, வாழ்ந்து, தியானிப்பதற்கு நாம் விடுதலையடைந்தவர்களாக இருக்க வேண்டும், ஆண்டவரின் இல்லத்தில் வாழ்பவர்கள் சுதந்திர மனிதர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார்.

இயேசுவோடு நட்புறவு கொள்வது என்பது, மாபெரும் புனிதர்கள் போதிப்பது போன்று, அவரோடு இருப்பது, அவரை உற்று நோக்குவது, அவரது வார்த்தைக்குச் செவிமடுப்பது, அதைச் செயல்படுத்த முயற்சிப்பது, மற்றும் அவரோடு பேசுவது எனவும் திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

இயேசுவின் குடும்பத்தில் ஒருவராய், அவரோடு நெருக்கமாய் இருப்பதைப் புரிந்துகொள்ளவும், அவ்வாறு வாழவும் ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்றும், இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.