2017-09-25 15:43:00

பாசமுள்ள பார்வையில்.. நேர்மைக்கு கிடைத்த வெகுமதி


அந்த ஊரில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து மழையே பெய்யவில்லை. ஊரில் கடும் பஞ்சம். மக்கள் பசியால் வாடினர். ஆதலால் பக்கத்து ஊரில் வாழ்ந்த நல்ல உள்ளம் படைத்த பணக்கார கைம்பெண் ஒருவரிடம் ஊர் மக்கள் சென்று, அம்மா, பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் பசியால் வாடும் எங்கள் சிறுபிள்ளைகளுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் என்று கெஞ்சினர். இளகிய உள்ளம் படைத்த அந்த அம்மா, ஊர் பெரியவர்களிடம், உங்கள் ஊரில் சிறார் யாரும் பசியால் வாட வேண்டாம், தினமும் ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு நான் ஏற்பாடு செய்கிறேன், நாளை என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள் என்று சொன்னார். பின் தனது மாளிகை திரும்பிய அந்த அம்மா, தனது ஊழியர் ஒருவரை அழைத்து, அந்த ஊரிலுள்ள சிறார் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும், அதிகரிக்கவும் கூடாது, குறையவும் கூடாது, ஒரு கூடையில் சரியான எண்ணிக்கையில் ரொட்டிகளை வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே நாளையிலிருந்து அமர்ந்திரு என்று சொன்னார். மறுநாள் அங்கு வந்த சிறார், கூடையிலிருந்து பெரிய ரொட்டியை எடுப்பதில் போட்டிப் போட்டனர் ஆனால் ஒரு சிறுமி மட்டும் ஒதுங்கி நின்று, எல்லாரும் எடுத்தபின் கடைசியில் கூடையில் இருக்கும் சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றாள். இப்படியே தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்தன. இதை அந்த பணக்கார அம்மா கவனித்துக் கொண்டிருந்தார். ஐந்தாவது நாளில் கடைசியில் சிறிய ரொட்டியை எடுத்துச் சென்ற சிறுமி, வீட்டிற்குச் சென்று தாயிடம் கொடுத்தாள். சிறுமியின் தாய் அதைப் பிரித்தார். அதிலிருந்து தங்கக்காசு கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு உடனே பணக்கார அம்மாவிடம் வந்து கொடுத்தாள் சிறுமி. அப்போது அந்த அம்மா, மகளே, உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் கொடுத்த பரிசு இது. இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல் என்றார். சிறுமியும் துள்ளிக் குதித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் காட்டினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.