2017-09-25 16:25:00

பங்களாதேசில் ரொஹிங்கியா குழந்தைகளிடையே யுனிசெஃப்


செப்.,25,2017. மியான்மாரிலிருந்து அண்மை நாட்களில் வெளியேறி, பங்களாதேசிற்குள் அடைக்கலம் தேடியுள்ள ரொஹிங்கியா குழந்தைகளுக்குத் தேவையான அவசரகால உதவிகளை வழங்கத் துவங்கியுள்ளது யுனிசெஃப் அமைப்பு.

ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பான யுனிசெஃப், கோப்பன்காஹனிலிருந்து 100 டன் அவசரகால உதவிப் பொருட்களை விமானம் வழியாகக் கொணர்ந்து வழங்கத் துவங்கியுள்ளது.

மியான்மாரிலிருந்து அடைக்கலம் தேடி பங்களாதேஷிற்குள் புகுந்துள்ள 4 இலட்சத்து 29,000 ரொஹிங்கியா மக்களுள், 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் சிறார்கள் என உரைக்கும் யுனிசெஃப் அமைப்பு, அனைவருக்கும்  சுத்தமான குடிநீரை வழங்கவேண்டியது அத்தியாவசியத் தேவை என தெரிவிக்கிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு ரொஹிங்கியா அகதிகளுக்கு உதவ 73 இலட்சம் டாலர்கள் தேவைப்படும் என, யுனிசெஃப் அமைப்பு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.