2017-09-25 17:03:00

கர்தினால் ஃபிலோனி : ஜப்பானில் மறைந்து வளர்ந்த நற்செய்தி விதை


செப்.,25,2017. ஒரு வாரத்திற்கு மேலாக ஜப்பான் நாட்டில் மேய்ப்புப்பணி சார்ந்த பயணத்தை மேற்கொண்டுவரும் நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், ஜப்பானிய நற்செய்தி அறிவிப்பின் வருங்காலம் குறித்து அந்நாட்டு ஆயர்களுக்கு உரை வழங்கினார்.

தன் பயணத்தை நிறைவு செய்து உரோம் நகர் திரும்புமுன், ஜப்பான் ஆயர் பேரவை அங்கத்தினர்களை மீண்டும் ஒருமுறை சந்தித்து உரை வழங்கிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், 16ம் நூற்றாண்டில் இங்கு வந்த, முதல் மறைபோதகர்கள் நற்செய்தி அறிவித்ததைத் தொடர்ந்து, Toyotomi Hidevoshi என்ற ஆட்சியாளரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டதுடன், இத்தகைய நிலைகளையும் தாண்டி கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும்வகையில் அதிகரித்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புனித பிரான்சிஸ் சவேரியாராலும், ஏனைய இயேசு சபையினராலும் ஜப்பானுக்கு கொணரப்பட்ட நற்செய்தி விதை, வேரோடு அழிக்கப்பட்டதாக தோற்றமளித்தாலும், மறைந்து வாழும் கிறிஸ்தவர்களால் அது பாதுகாக்கப்பட்டு வேரூன்றி தழைத்தது என எடுத்துரைத்த கர்தினால், இறைவனின் கருணை உட்பட, நற்செய்தி எடுத்துரைத்த உயர்ந்த விடயங்கள் மக்களைக் கவர்வதாக இருந்தன, அதுவே, சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இடம்பெற்றது எனவும் கூறினார்.

உலகின் ஏனையப் பகுதிகளைப்போல், ஜப்பான் மக்களும், இயேசுவின் நற்செய்தி குறித்து தாகம் கொண்டுள்ளதால், அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டிய கடமை, தலத்திருஅவை அங்கத்தினர்களுக்கு உள்ளது என மேலும் கூறினார், கர்தினால் ஃபிலோனி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.