2017-09-25 17:04:00

இறையாட்சியில் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன


செப்.,25,2017. இறையரசில் வேலைவாய்ப்பற்றவர்கள் என்று எவரும் இல்லை, ஒவ்வொருவருக்கும் ஒரு பங்களிப்பு உள்ளது, அதன்படி, இறுதியில் இறைநீதியில் ஒவ்வொருவரும் ஊதியம் பெறுவர் என, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வேலையாட்களைப் பணிக்கு அழைத்து, மாலையில் வேலை முடியும்போது, ஒரு மணி நேரம் வேலை பார்த்தவர்களுக்கும், காலை முதல் வேலை பார்த்தவர்களுக்கும் சமமான ஊதியம் கொடுத்த இஞ்ஞாயிறின் உவமை குறித்து, தன் மூவேளை செப உரையில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாக இயேசு நமக்குக் கொணர்ந்த மீட்புக்கு நாம் தகுதியற்றவர்களாக இருந்தும், அது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இவ்வுவமை நமக்குச் சொல்லித் தருகிறது என்றார்.

இறைவனின் எண்ணங்களும் வழிகளும் நம் எண்ணங்களையும் வழிகளையும் ஒத்தவையல்ல என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையன்பின் தர்க்கவியல் குறித்து புரிந்துகொள்ள இவ்வுவமை அழைப்புவிடுக்கிறது என்றார்.

கடவுள் எவரையும் ஒதுக்கி வைப்பதில்லை, மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் முழுமையை அடைய வேண்டும் என்பதையே விரும்புகிறார் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oklahoma நகரில், இச்சனிக்கிழமையன்று அருளாளராக அறிவிக்கப்பட்ட அருள்பணி ஸ்டான்லி பிரான்சிஸ் ரோத்தர் அவர்கள் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.