2017-09-25 16:36:00

இறையன்பை மற்றவர்களும் அனுபவிக்க உதவும் நற்செயல்கள்


செப்.,25,2017. திருத்தந்தையின் சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிதி அமைப்பிற்கு பங்களிப்போரை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து, அவர்களுக்கு தன் ஊக்கத்தையும் நன்றியையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருவர் ஒருவரிடம் அன்புகூர்வதிலிருந்து பிறக்கும் இத்தகைய உதவிகள், இறையன்பை மற்றவர்களும் அனுபவிக்க உதவுகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை அன்புகூர்வதற்குரிய மனதைப் பெறுவதற்கு, செபம், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், மற்றும் திருப்பலியில் பங்குகொள்தல் அவசியம் எனவும் கூறினார்.

குழு உணர்வோடும், ஒருமைப்பாட்டுணர்வோடும் பணியாற்றும் இவ்வமைப்பு, சமூகத்தில் கத்தோலிக்கர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை ஒத்திருக்கிறது எனவும் பாராட்டினார் திருத்தந்தை.

திருத்தந்தையின் சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு உதவிவரும் அமைப்பின் அங்கத்தினர்கள், உடன்பிறப்பு உணர்வு, மற்றும், பகிர்தலின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளார்கள் என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.