2017-09-23 16:41:00

பொதுக்காலம் 25ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சென்னை ‘சென்ட்ரல்’ இரயில் நிலையத்தில் ஒருநாள், பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு, நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. அவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி,  நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கிவிட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின், வரிசையில் நின்றுகொண்டிருந்த பலர், அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்து சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள், அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.

வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் சென்றதும், என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொண்டேன்? என்னுடைய வரிசையில் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா? நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். இல்லையா?

‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம், நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள். என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லியிருக்கும் உவமையை நினைத்துப் பார்க்கும்போது, இதேபோன்றதொரு கோபம் தலைதூக்கியதை உணர்ந்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கும் கோபம் வரலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது.  இந்த உவமையை முற்றிலும் புரிந்துகொள்வது கடினம் என்று ஒரு சில விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவேதான், இந்த உவமை ஒரே ஒரு நற்செய்தியில், அதாவது மத்தேயு நற்செய்தியில் மட்டும் உள்ளது என்பது, அவர்கள் கணிப்பு.

தன் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஆட்களைத் தேடிச் செல்லும் ஒரு முதலாளியின் கதை இது. காலை 6 மணி முதல் அவர் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு  கூலி கொடுக்கப்படவேண்டும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் ஊதியம் பெற்றால்தான் அவர்கள் வீட்டில் உணவு இருக்கும். எனவே, அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான் அவர்களால் இரவு உணவை தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனவே, உவமையில் வரும் முதலாளி மாலை ஆறுமணி ஆனதும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார்.

மோசே வழங்கிய இந்த பரிவுமிக்க சட்டத்தைப்பற்றி (இணைச்சட்டம் 24: 14-15) சிந்திக்கும்போது, இன்று நிகழும் பல அவலங்கள் மனதை காயப்படுத்துகின்றன. தங்கள் உழைப்புக்குக் கிடைக்கவேண்டிய கூலி கிடைக்காமல், பசியும், பட்டினியுமாக படுக்கச் செல்லும் பல குடும்பங்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். வறியோரின் வயிற்றில் அடிப்பவர்கள், வளமாக வாழ்ந்துவிட முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று செபிப்போம். இனி தொடர்ந்து, இந்த உவமையை இயேசுவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:

மத்தேயு நற்செய்தி 20: 8-16

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்து, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.

இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சிகரமான ‘புரட்டிப்போடுதல்’ நிகழ்கின்றது. பாரம்பரியம் என்ற பெயரில், சமுதாயம் பின்பற்றிவந்த தவறான வழிமுறைகளைப் புரட்டிப்போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் ‘புரட்டிப் போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கச் சொல்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.

ஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலி - அதாவது, ஒரு தெனாரியம் - கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலை கால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும் இதைக் கண்டு மகிழ்ச்சி... அவர்களுக்கு வேறொரு வகையில் மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. நமது கண்ணோட்டத்திலும், அவர்களது ஏமாற்றமும், கோபமும் நியாயமாகத் தெரிகிறது. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. அனைவருக்கும், நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராள குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால். இவற்றை நாமும் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறோம் என்பது உண்மைதானே!

இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராள குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவற்றைப் பற்றி அவ்வப்போது நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவனின் அன்பு அளவற்றது, நிபந்தனையற்றது என்பதையெல்லாம் சிந்திக்கும்போது, அவரது நீதி எங்கே என்ற கேள்வி எழுகிறது. அவர் நீதியானவர் என்பதை வலியுறுத்தும்போது, அவர் அன்பு எங்கே போயிற்று என்ற சந்தேகம் எழுகிறது. நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், இயேசு சொல்லும் உவமைகள் அமைந்துள்ளன.

இந்த உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும், நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும், மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில், அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை, கவனமாகக் கேட்போம்.

‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’

"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்க விடாமல், நமது எண்ணங்களின்படி, அவரை, பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணநலன்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.

கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்க முடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள் தன் நீதியிருக்கை மீது அமர்ந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், நாம் கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்துவிடுகிறோம். அந்த நேரத்தில், கடவுள், தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராள குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது, அதை புரிந்துகொள்ளமுடியாமல், தடுமாறுகிறோம். இறுதியில் வந்தவர்களுக்கு, நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளை இறைவன் செய்யும்போது, நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கோபம் கொள்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?

கடவுளை கடவுளாகவே இருக்க விடுவோம். அப்போது நமக்கும் அந்தத் தெய்வீக இயல்பில் ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.