2017-09-23 17:40:00

'உலக நாடுகளின் குடும்பத்தில் வத்திக்கான்’


செப்.23,2017. மனித சமுதாயத்திற்கென திருப்பீடம் தன் அரசியல் வழிமுறைகள் வழியே சாதித்துள்ளவை குறித்து, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு நூலுக்கு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால், பியெத்ரோ பரோலின்.

2002ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு முடிய, 14 ஆண்டுகள் ஐ.நா. அவையில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றிய பேராயர், சில்வானோ தொமாசி அவர்கள், 'உலக நாடுகளின் குடும்பத்தில் வத்திக்கான்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலின் வெளியீட்டு விழாவில், கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

அரசியல் அரங்கத்தில், திருப்பீடத்தின் முக்கிய அக்கறைகளான, அமைதி, மனித உரிமைகள், வளர்ச்சி, புலம்பெயர்தல், கல்வி, தொழில், புதிய கண்டுபிடிப்புக்கள், தகவல் தொடர்பு, அனைத்துலக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்நூல் பேசுகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

துவக்கத்திலிருந்தே, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக உழைத்துவரும் திருஅவை, பொதுநலனை மனதில் கொண்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இடையீட்டாளராகவும் செயல்பட்டு வந்துள்ளது என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

வர்த்தக, இராணுவ, அல்லது, அரசியல் நலன்களைத் தேடிச்செல்லும் தேவை, திருப்பீடத்திற்கு இல்லை என்பதால், மனித சமுதாயத்தின் பொதுநலனுக்கு உழைப்பது, திருப்பீடத்திற்கு எளிதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.