2017-09-23 17:32:00

இரக்கத்தின் வெள்ளி செயல்பாடுகளைத் தொடரும் திருத்தந்தை


செப்.23,2017. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், சில வெள்ளிக்கிழமைகளில், இரக்கத்தின் செயல்பாடாக, பிறரன்பு இல்லங்களைச் சந்தித்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 22, இவ்வெள்ளியன்று, உரோம் நகரின் சாந்தா லூச்சியா (Santa Lucia) மருத்துவ மனைக்குச் சென்று, நோயாளிகளைச் சந்தித்தார்.

நரம்புத் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கிவரும் சாந்தா லூச்சியா மருத்துவ மறுவாழ்வு மையத்திற்கு, வெள்ளி மாலை சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மருத்துவ மனையின் தலைவர், மருத்துவர் Maria Adriana Amadito, பொது மேலாளர், மருத்துவர் Eduardo Alessi மற்றும், மருத்துவமனை பணியாளர்களால் வரவேற்கப்பட்டார்.

நரம்புத் தொடர்பு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பிரிவுக்கு முதலில் சென்று பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழந்தைகளுடன் சிறிது நேரம் சிரித்துப் பேசியபின், அங்கு குழுமியிருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மொழிகளை வழங்கினார்.

இதன் பின்னர், சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ள இளையோர் உட்பட, 15 வயதுமுதல், 25 வயது வரையுள்ள இளையோரின் பிரிவுக்குச் சென்று உரையாடியபின், அம்மருத்துவ மனையில் உள்ள சிற்றாலயத்திற்குச் சென்று செபித்தார்.

இறுதியில் அனைவரிடமும் விடைபெற்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திற்குத் திரும்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.