2017-09-22 16:22:00

மெக்சிகோவுக்கு திருத்தந்தையின் பெயரால் நிதியுதவி


செப்.22,2017. மெக்சிகோவின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1,50,000 டாலர்கள், அதாவது, 97,50,000 ரூபாயை, உடனடி உதவியாக, அனுப்பியுள்ளார்.

செப்டம்பர் 19, கடந்த செவ்வாயன்று மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 250க்கும் அதிகமானோர் இறந்துள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப்பணிகளுக்கு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, திருத்தந்தையின் பெயரால் உதவித் தொகையை அனுப்பியுள்ளது.

மெக்சிகோவில், பாதிக்கப்பட்ட பல மறைமாவட்டங்களுக்கு, இந்த உதவித் தொகை அனுப்பப்பட்டுள்ளது என்றும், உலகெங்கும் உள்ள மறைமாவட்டங்கள் அனைத்திற்கும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1985ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி மெக்சிகோ நகரில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பதும், 32 ஆண்டுகளுக்குப் பின், இவ்வாண்டு, அதே செப்டம்பர் 19ம் தேதி, ரிக்டர் அளவில் 7.1 கொண்ட நிலநடுக்கத்தில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.