2017-09-22 15:38:00

புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டிருப்போருடன் திருத்தந்தை


செப்.22,2017. ஐரோப்பியக் கண்டத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோரின் சார்பாக உழைக்கும் பணியாளர்களையும், அதிகாரிகளையும் தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் குழுவான COMECE ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் ஐரோப்பிய அரசு அதிகாரிகளை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர் மட்டில் ஐரோப்பிய நாடுகள் காட்டிவரும் அக்கறையை பாராட்டுவதாகக் கூறினார்.

புலம்பெயர்ந்தோர் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறும் தருணம் முதல், அவர்கள் மேற்கொள்ளும் ஆபத்து நிறைந்த பயணம், தஞ்சம் புகும் நாடுகளில் சந்திக்கும் பிரச்சனைகள், மீண்டும் தங்கள் தாயகம் திரும்பும் வழிகள் என, அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு உதவிகள் செய்வதே, கத்தோலிக்கத் திருஅவையின் தலையாயக் கடமை என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

அந்நியரைப் பற்றிய முற்சார்பு எண்ணங்களால், இன்னும் ஐரோப்பாவில் அந்நியரைக் குறித்த அச்சம் நிலவி வருவது தனக்கு மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய கத்தோலிக்க சமுதாயம், இந்த நெருக்கடியான வேளையில், காயங்களைக் குணமாக்கி, நம்பிக்கையூட்டும் கருவியாகச் செயல்பட அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.