2017-09-22 16:36:00

செப்டம்பர் 23, ராஞ்சியில் பல்சமயக் கண்டனக் கூட்டம்


செப்.22,2017. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், சீக்கியர்கள், மற்றும் சில இந்துக்கள் அனைவரும் இணைந்து, செப்டம்பர் 23, இச்சனிக்கிழமை ராஞ்சி நகரில் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மத மாற்றத் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை கண்டனம் செய்து, இந்த அமைதிப் போராட்டம் நிகழும் என்று, இயேசு சபை துறவியும், இறையியல் பேராசிரியருமான அருள்பணி மைக்கேல் கெர்க்கெட்டா அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மத மாற்றத் தடைச்சட்டத்திற்கு, மதச் சுதந்திரச் சட்டம் என்று பெயரிட்டிருப்பது, உண்மையிலேயே விந்தையாக உள்ளது என்று கூறிய அருள்பணி கெர்க்கெட்டா அவர்கள், இச்சட்டத்தின் வழியே அரசு, மக்களின் மத உணர்வுகளை தேவையின்றி தூண்டி வருகிறது என்று குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் மத வன்முறையைத் தூண்டிவிடும் அரசியல் தலைவர்களைக் குறித்து, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியடோர் மாஸ்க்ரீனஸ் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடல் குறித்து பேசிய அருள்பணி கெர்க்கெட்டா அவர்கள், தற்போது மத்தியிலும் மாநிலங்களிலும் அரசு செய்யும் கட்சிகள் பின்பற்றும் இந்து அடிப்படைவாதம், மக்களைப் பிரிக்கும் சக்திகளாக மாறியுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.