2017-09-21 16:29:00

முழுமையான அணு சோதனை ஒழிப்பு ஒப்பந்தம் குறித்து திருப்பீடம்


செப்.21,2017. அணு அழிவு குறித்து உலகில் நிலவும் அச்சத்தை நீக்குவதற்கும், உலகம் அமைதியில் வாழ்வதற்கும், முழுமையான அணு சோதனை ஒழிப்பு ஒப்பந்தம் அடித்தளமாக அமைகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் கூறினார்.

திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், நியூ யார்க் நகரில் இப்புதனன்று இடம்பெற்ற, முழுமையான அணு சோதனை ஒழிப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் பத்தாவது உலக கருத்தரங்கில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அண்மைய சில மாதங்களாக, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக வெளியாகும் செய்திகள், உலகை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் இவ்வேளையில், இந்த உலக ஒப்பந்தத்தை இன்னும் உறுதியாக நடைமுறைப்படுத்தும் கடமை உலக நாடுகளுக்கு உள்ளது என்று பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பது ஒன்றே, இவ்வுலகை, அமைதியில் ஒருங்கிணைக்கும் என்றும், நாடுகள், ஒன்றுக்கொன்று எச்சரிக்கைகள் விடுத்து வருவது, அழிவுக்கே நம்மை இட்டுச்செல்லும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா. அவையில் கூறிய கருத்தை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.