2017-09-21 16:01:00

பாலியல் கொடுமை கிறிஸ்துவால் வெறுக்கப்பட்ட பாவம்


செப்.21,2017. சிறுவர் சிறுமியருக்கு எதிராக திருஅவையின் பணியாளர்கள் விளைவித்த துன்பங்கள், தன்னை மிகவும் மனவேதனை அடையச் செய்துள்ளதாகவும், இதனால், திருஅவையும் அவமானம் அடைந்துள்ளதென்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பாலியல் ரீதியாக சிறாருக்கு தீங்கிழைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஓர் சிறப்பு அவையின் உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

பாலியல் வன்கொடுமை, கிறிஸ்துவால் பெரிதும் வெறுக்கப்பட்ட பாவம் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, இந்தக் கொடுமையை, திருஅவையிலிருந்து முற்றிலும் நீக்கும் பணி, ஒவ்வொரு தலத்திருஅவையிலும் துவங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருடன் தலத்திருஅவைகள் உரையாடல்களை மேற்கொண்டுள்ளது என்பதும், இந்தக் கொடுமையைத் தவிர்க்க, முழு நாள் செப, தவ முயற்சிகள் நடைபெற்றுவருவதும், இந்தத் தவறை சீர் செய்வதற்கு திருஅவை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்பதற்கு அடையாளங்கள் என்று, திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

சிறாருக்கு எதிராக நிகழ்ந்துவரும் பாலியல் கொடுமைகளை அகற்ற கடந்த மூன்று ஆண்டுகளாக திருஅவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போற்றுதற்குரியன எனினும், இன்னும் இந்த விடயத்தில் பெரும் கவனமும், அக்கறையும், தீவிரமும் காட்டப்படவேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.