2017-09-21 15:23:00

பாசமுள்ள பார்வையில்.. மனிதரின் மதிப்பை உணர்த்திய ஆசிரியர்


அன்று சிறுவன் அருண், தன் வகுப்பு ஆசிரியர் விமலாவிடம், தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, தன் நண்பர்கள் தன்னை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறி அழுதான். தான் செய்த தவறை உணர்ந்து, தன் நண்பர்களின் அன்புக்காக அருண் ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர், அருணுக்கு உதவ நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்ற ஆசிரியர், ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைக் கையில் வைத்துக்கொண்டு, இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். உடனடியாக எல்லா மாணவர்களும் துள்ளி எழுந்து கைகளை உயர்த்தினர். மாணவர்களின் செய்கையைப் பார்த்த ஆசிரியர், அந்த ரூபாய்த் தாளைக் கசக்கி, இப்போது இந்த ரூபாய்த் தாள் யாருக்கு வேண்டும் எனக் கேட்டார். அப்போதும் மாணவர்கள், கைகளைத் தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர். பின், அந்த ரூபாய்த் தாளை காலில் மிதித்த ஆசிரியர், அதே கேள்வியை மீண்டும் கேட்டார். மாணவர்களின் கைகள் தூக்கியபடியே இருந்தன. பின் கையில் அந்த ஐம்பது ரூபாய் தாளை எடுத்த ஆசிரியர், இந்த ரூபாய்த் தாள் அழுக்காக இருந்தாலும், கசங்கி இருந்தாலும், அதன் மதிப்பு குறைவதே இல்லை. அதேபோல், சிலநேரங்களில் நாம் தெரியாமல் செய்த தவறுகள் நம் மதிப்பைக் குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு. அவன், தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும். அந்த வகையில் அருண் சந்தர்ப்ப சூழலால் ஒரு தவறைச் செய்துவிட்டான். அந்தத் தவறு ரூபாய்த் தாளின்மீது பதிந்திருக்கும் அழுக்கு போன்றது. அதனால் அருணின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே அருணை ஒதுக்காமல் அவனோடு எப்போதும்போல் பழகுங்கள் என்றார் ஆசிரியர் விமலா. பின் சக மாணவர்கள் அருணிடம் மன்னிப்புக் கேட்டு, அவனைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.