2017-09-21 16:34:00

சமூகத்தொடர்புத் துறையில் இயேசு சபையினரின் பங்களிப்பு


செப்.21,2017. திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தில் இயேசு சபையினரின் பணி பங்களிப்பு குறித்த ஒப்பந்தம், இவ்வியாழனன்று திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்திற்கும் இயேசு சபையினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.

இவ்வாரம் திங்களன்று வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர், இயேசு சபை அருள்பணி Antonio Stefanizzi அவர்கள், தன் நூறாவது பிறந்தநாளைச் சிறப்பித்தது பற்றி இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ள திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்தின் தலைவர், அருள்பணி தாரியோ எத்வார்தோ விகனோ அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது, வானொலியின் இயக்குனராக பணியாற்றிய அருள்பணி Stefanizzi அவர்கள், சமூகத்தொடர்பில் பயன்படுத்திய வழிமுறைகள், இத்துறை குறித்த திருப்பீடத்தின் மறுசீரமைப்புத் திட்டங்களின் மையமாக உள்ளன என கூறியுள்ளார்.

வத்திக்கான் வானொலியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இயேசு சபையினர் விலகியபின், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இயேசு சபையினருக்கும் திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத்திற்கும் இடையே நிகழ்ந்த ஆழமான பேச்சுவார்த்தைகளின் பயனாக, இயேசு சபையினரின் ஒத்துழைப்பும் பணியும் இத்துறையில் தொடரும் முடிவு ஏற்பட்டுள்ளது என மேலும் உரைத்துள்ளார், அருள்பணி விகனோ.

சமூகத் தொடர்புத் துறையில் இயேசு சபையினரின் பணி தொடர உள்ளது குறித்து கருத்து வெளியிட்ட இயேசு சபை பிரதிநிதி அருள்பணி Juan Antonio Guerroro Alves அவர்கள், திரு அவைக்குப் பணியாற்றும் தங்கள் அழைப்பிற்கு இணங்க, திருத்தந்தையின் மறு சீரமைப்புத் திட்டங்களுக்கு ஏற்றவகையில், சமூகத்டொடர்புத் துறையில் பணிகளைத் தொடர்வதில் மகிழ்கிறோம் என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.