2017-09-21 16:21:00

ஒசாக்கா பேராலயத்தில் கர்தினால் ஃபிலோனியின் மறையுரை


செப்.21,2017. ஆண்டவரைத் தொடர்வதற்கு மத்தேயு தானாகவே முன்வரவில்லை, அவரை இயேசு அழைத்ததால், அவர் ஒரு சீடராக மாறினார் என்று நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி அவர்கள் இவ்வியாழனன்று மறையுரை வழங்கினார்.

கடந்த சில நாட்களாக, ஜப்பான் நாட்டில் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ள கர்தினால் பிலோனி அவர்கள், ஒசாக்கா (Osaka) பேராலயத்தில், புனித மத்தேயு திருநாள் திருப்பலியை நிறைவேற்றிய வேளையில், இவ்வாறு மறையுரை வழங்கினார்.

மத்தேயுவைப் போலவே, அனைத்து சீடர்களும், இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரைப் பின்தொடர்ந்தனர் என்று கூறிய கர்தினால் பிலோனி அவர்கள், இறைவனின் அழைப்பு நாமாகவே தேடி அடையும் முயற்சி அல்ல, மாறாக, இறைவன் வழங்கும் சுதந்திரக் கொடை என்று குறிப்பிட்டார்.

வரிவசூல் செய்யும் இடத்தில் மத்தேயு அழைக்கப்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பிலோனி அவர்கள், ஜப்பானின் பெரு நகரங்கள் அனைத்திலும், மக்கள் தங்கள் பணிகளில் மூழ்கியிருக்கும் வேளையில், இறைவனின் அழைப்பு அவர்களை எவ்விதம் அடைய முடியும் என்பதை கற்றுத்தருவதற்கு, தலத்திருஅவை முயற்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.