2017-09-20 15:39:00

திருத்தந்தையின் மறைக்கல்வி : இளையோருக்கோர் அழைப்பு


கோடைகாலம் முடிவடைந்து, குளிர்காலம், வழக்கத்திற்கு மாறாக, சிறிது முன்னதாகவே துவங்கிவிட்ட நிலையில், இப்புதனன்று, சூரியன் மிக பிரகாசமாக ஒளிவீச, தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 1மணி 30 நிமிடங்களுக்கு தன் மறைக்கல்வி உரையை, இளைய சமுதாயத்திற்குரிய ஒரு விண்ணப்பமாக முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர் நோக்கு, அதாவது, கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, நம்பிக்கையின் நற்பண்பு பற்றி எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து சிந்திப்போம். நான் நேரடியாக, முகத்திற்கு முகம் பார்த்து, குறிப்பாக இளைய சமுதாயத்திடம், வழி நடத்தல் மற்றும் ஊக்குவித்தல் குறித்து சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். முதன் முதலாக, இறைவன் உங்களை எங்கு நட்டுள்ளாரோ அந்த இடத்தில், நம்பிக்கையில் உறுதியாயிருங்கள், மனதை தளரவிடாதீர்கள். இறைவனின் தந்தைக்குரிய அக்கறையிலும், இயேசுவின் அன்பிலும், அனைத்தையும் மாற்றவும் புதுப்பிக்கவும் வல்ல‌ தூய ஆவியாரின் வல்லமையிலும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அனைத்தையும் பிளவுறச் செய்து, மக்களை கீழ்நோக்கித் தள்ளும் எதிர்மறைப் போக்கிற்கு உங்களை கையளிக்காதீர்கள். இறைத்திட்டத்திற்கு முற்றிலுமாக இயைந்தவகையில் இவ்வுலகை கட்டியெழுப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள். உங்களைச் சுற்றியிருக்கும் அழகு குறித்து உங்கள் கண்களை திறந்து வையுங்கள். விசுவாச விளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். இறைவன் கொடுத்திருக்கும் கொடைகளாம் உங்கள் மனம் மற்றும் இதயத்தைப் பயன்படுத்தி, நீதியிலும், சுதந்திரத்திலும், மாண்பிலும் மனிதகுலம் வளர உதவுங்கள். பாவத்தாலும், விரோத உணர்வுகளாலும், பிரிவினைகளாலும் காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, வெற்றிவாகை சூடியுள்ள இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, அன்பையும், இரக்கத்தையும் கொணர வேண்டும் என அழைக்கப்படுகிறோம்.  உங்களின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருங்கள். விழும்போதெல்லாம் எழுந்திருங்கள். நம்பிக்கை இழப்பிற்கு உள்ளாகாதீர்கள். ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமெனில், வாழுங்கள், அன்புகூருங்கள், மற்றும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்போருக்கு, இறையருளின் துணையுடன், நம்பிக்கையின் வழிகாட்டும் ஒளியாகச் செயல்படுங்கள்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மெக்சிகோவில் இச்செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன் ஆழ்ந்த அனுதாபத்தையும் அருகாமையையும், செப உறுதியையும் வெளியிட்டார். காயமுற்ற மக்களுக்கும், உயிரிழப்புக்களால் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கும், இறைவன் ஆறுதலை வழங்கவேண்டும் என செபிக்க அனைவருக்கும் அழைப்புவிடும் அதேவேளை, மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்காகவும் செபிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் விண்ணப்பித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானோலி








All the contents on this site are copyrighted ©.