2017-09-20 15:46:00

ஜப்பான் அருள்பணியாளர், துறவியருடன் கர்தினால் ஃபிலோனி


செப்.20,2017. ‘ஜப்பான் நாட்டிற்கு நான் வந்திருப்பது, இங்குள்ள திருஅவையைக் குறித்து கற்றுக்கொள்ளவும், நற்செய்தியை பரப்பும் பணியில் மேலும் என்ன செய்யமுடியும் என்பதை உங்களுடன் சேர்ந்து சிந்திக்கவுமே’ என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், ஹிரோஷிமா நகரில் வழங்கிய ஓர் உரையில் கூறினார்.

தன் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, ஹிரோஷிமா நகரில், ஜப்பானிய ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினரை, இப்புதனன்று சந்தித்த வேளையில், கர்தினால் ஃபிலோனி அவர்கள் இவ்வாறு கூறினார்.

அமைதியை கட்டியெழுப்புதல், ஹிரோஷிமா தலத்திருஅவையின் நன்னெறி, மற்றும் ஆன்மீக அழைப்பு, ஜப்பான் நாட்டில் கிறிஸ்துவை அறிவித்தல் என்ற மூன்று கருத்துக்களில், கர்தினால் ஃபிலோனி அவர்கள் தன் உரையைப் பகிர்ந்துகொண்டார்.

எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் ஜப்பான் நாட்டு கத்தோலிக்கர்கள், தங்கள் நாட்டில் மட்டுமல்ல, மாறாக, கிறிஸ்துவின் கட்டளைக்கேற்ப, உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று கர்தினால் ஃபிலோனி அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.